கனடியப் பொருள் மீதான 50% வரி தற்காலிக நிறுத்தம்: டிரம்ப் - கார்னி உடன்பாடு

கனடியப் பொருள் மீதான 50% வரி தற்காலிக நிறுத்தம்: டிரம்ப் - கார்னி உடன்பாடு

2 mins read
0c0c24d7-9c3f-4d9d-acd1-e224ffeb8109
கனடியப் பிரதமர் மார்க் கார்னியுடன் ஆகஸ்ட் 18ஆம் தேதி பேசிய பிறகு, அந்நாட்டுப் பொருள் மீதான 50 விழுக்காடுப் புதிய வரியைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெளியிட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்/ஒட்டாவா: கனடியப் பொருள்கள்மீது புதன்கிழமை (ஆகஸ்ட் 19) அமலுக்கு வரவிருந்த 50 விழுக்காடுப் புதிய வரியை மூன்று நாள்களுக்குத் தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.

அதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 18) இரவு அறிவித்தார்.

மேலும், இரு நாடுகளும் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கனடியப் பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிக்கையில், “முக்கியமான பணிகள் இன்னும் நிலுவையில் இருந்தாலும், வரி தொடர்பான பேச்சுவார்த்தையில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளோம்,” எனத் தெரிவித்தார்.

ஆவணங்கள் இறுதி செய்யப்படுவதற்கு உட்பட்டு, கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தத்தை எட்டியுள்ளதன் அடிப்படையில், ஆகஸ்ட் 19ஆம் தேதி அமலுக்கு வரவிருந்த 50 விழுக்காடுப் புதிய வரி விதிப்புக்குத் தற்காலிகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டுரூத் சோஷியலில் திரு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபரும் கனடியப் பிரதமரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி இரண்டாவது முறையாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த வாரத்தில் அவர்களிடையே நடக்கும் இரண்டாவது உரையாடல் இது.

அனைத்து அமெரிக்கப் பொருள்களுக்கான விரிவான சந்தை அணுகல், பொருளியல் பாதுகாப்பு உடன்பாடு, மின்னிலக்க வணிக ஒருங்கிணைப்பு ஆகியவை அதில் அடங்கும் என அமெரிக்க வணிகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பால் பொருள்கள், மதுபானங்கள், மோட்டார் வாகனங்கள் மீதான வரிகள் தொடர்பான அமெரிக்காவின் கவலைகளுக்குத் தீர்வுகாண கனடா கடப்பாடு கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் திரு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை. கனடிய அரசாங்கமும் ஒப்பந்தத்தின் விவரங்களை உறுதிப்படுத்தவில்லை.

புதிய வரிகள் அமலுக்கு வந்திருந்தால் 25 பில்லியன் வெள்ளி (20 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் பாதிக்கப்பட்டிருக்கும்.

புதிய தீர்வைகள் மரக்கட்டை, ஒயின், பால் பொருள்கள் உள்ளிட்ட துறைகளில் வேலை இழப்புகளுக்கும் நிறுவன மூடல்களுக்கும் வழிவகுத்திருக்கும் எனத் தொழில் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் இந்தத் தற்காலிகத் தடை அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போதைக்கு அமெரிக்கா, கனடா இடையேயான வணிகப் பதற்றம் தணிந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
கனடாஅமெரிக்காதீர்வை