கோலாலம்பூர்: மலேசிய எதிர்தரப்பு அரசியல் கட்சியான பெர்சத்துவில் உட்கட்சிப் பூசல் வளர்ந்து வருவதை சனிக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் வருடாந்தர பொதுக் கூட்டத்தில் காணமுடிந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.
கட்சியின் சில உறுப்பினர்கள் தம்மை தலைவர் பதவியில் இருந்து அகற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பெர்சத்து கட்சித் தலைவர் முகைதீன் யாசின் மேடையில் கூறியதைத் தொடர்ந்து கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
“என்னைக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க நமது கட்சியில் உள்ள சிலரே கையெழுத்து இயக்கம் நடத்துவதாக அறிந்தேன். அவ்வாறு செய்வது கட்சியின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது,” என்று திரு முகைதீன், 78, கூறியதாக மலாய் மெயில் தெரிவித்துள்ளது.
“தலைவர் பதவியை அகற்ற முடிந்தால், அடுத்து துணைத் தலைவர், தொடர்ந்து கிளைத் தலைவர்கள், ஏன் உச்சமன்ற நிர்வாகிகளையே கூட அதே வழியில் நீக்க முடியும்,” என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
தமது உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்படுவதாகவும் கட்சியை வழிநடத்தும் ஆற்றலுடன் தாம் தொடர்ந்து விளங்கி வருவதாகவும் கூறிய திரு முகைதீன், தம்மால் இயலாமல்போனால் பதவியில் நீடிக்கப்போவதில்லை என்றார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருசிலர் ‘பதவி விலகுங்கள்’ என்று மலாய் மொழிவில் குரல் எழுப்பினர். அவர்களுக்கு எதிராக சத்தம் போட்ட சிலர், ‘முகைதீன் வாழ்க’ என்று முழங்கினர்.
ஷா அலாமில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பை கட்சியின் நிர்வாகிகள் சிலர் தலையிட்டு அமைதி ஏற்படுத்தினர்.
அப்போது சிலர் நாற்காலிகள் மீது ஏறி நின்றனர். மேலும் சிலர், கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர் என்று ‘த ஸ்டார்’ இணையச் செய்தி கூறியது.
தொடர்புடைய செய்திகள்
கூச்சல் குழப்பம் இருந்தபோதிலும் கட்சி நிகழ்ச்சிகள் சுமுகமாக நடைபெற்றது என்று திரு முகைதீன் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
கூட்டத்தில் குழப்பம் ஏற்படக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு, கட்சியின் பாதுகாப்பு அதிகாரிகள் புகார் அளித்தால் அது பற்றி பரீசிலிக்கப்படும் என்றார்.
“இப்போதைக்கு எதையும் முன்கூட்டி தெரிவிக்க முடியாது. அதிகாரிகளின் புகாரைப் படித்த பின்னர் நடவடிக்கை பற்றி பரிசீலிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
“தற்போது நடந்திருப்பது ஒரு சிறிய நிகழ்வு. பெர்சத்து கட்சி வலுவாகவும் ஒற்றுமையுடனும் இருக்கிறது என்பதே மிகவும் முக்கியமானது.
“நான் ஜனநாயக நெறிமுறைகளின்படி கடந்த ஆண்டு தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டேன். மூன்றாண்டு காலத்திற்கு எனது பதவி செல்லும். மாற்றம் எதுவும் செய்யப்பட வேண்டுமானால் அது கட்சியின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்,” என்றார் பெரிக்காத்தான் நேஷனல் (PN) எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவருமான திரு முகைதீன்.

