வாஷிங்டன்: ஈரான் மீதான தனது அண்மைய தாக்குதல்களை முடித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் திங்கட்கிழமை இரவு தெரிவித்தது. ஈரானிய ராணுவக் கட்டளை மையங்கள், ஏவுகணை, ஆளில்லா விமான ஏவுதளங்கள், கடல்சார் திறன்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அது கூறியது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, தனது எக்ஸ் சமூக ஊடக இணையத்தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ஈரான் மீதான அமெரிக்காவின் அண்மைய சுற்றுத் தாக்குதல்கள் சுமார் ஐந்து மணி நேரம் நீடித்தன. இது ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பத்து இரவுகளாக நடத்தி வரும் தாக்குதல்களின் எண்ணிக்கை என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
“ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடரும் ஈரானின் திறனைக் குறைக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சி இது,” என்று அமெரிக்கா கூறியுள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது ஈரான் பதிலடி கொடுத்தது. அந்த வகையில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகள்மீது தாக்குதல்களை நடத்தியது.
போரின் போது ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களாலும் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்களாலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
இந்தப் போர் எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது மற்றும் உலகளாவிய சந்தைகளை உலுக்கியுள்ளது.
போரில் உயிரிழந்த அமெரிக்கப் படை வீரர்களின் எண்ணிக்கை கடந்த வார இறுதியில் 17 ஆக உயர்ந்தது.
அமெரிக்கப் படைகளுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிறகு, ஈரானைப் பழிவாங்கப் போவதாகத் திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சூளுரைத்தார்.
கடந்த வாரத்தில், ஈரானில் தாக்கப்படும் இலக்குகளின் எண்ணிக்கையை எரிசக்தி ஆலைகள், பாலங்கள்வரை விரிவுபடுத்தப்போவதாகத் திரு டிரம்ப் அச்சுறுத்தினார்.
இதுபோன்ற இலக்குகளைத் தாக்குவோம் என டிரம்ப் முன்பு விடுத்த அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, அமெரிக்காவில் உள்ள அனைத்துலக சட்ட வல்லுநர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில், இத்தகைய தாக்குதல்கள், போர்க்குற்றங்களுக்கு ஒப்பாக அமையக்கூடும் என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

