ஹாங்காங்: ஹாங்காங் நகரில் ‘வாங் ஃபுக் கோர்ட்’ எனப்படும் வீடமைப்புக் கட்டடங்களில் புதன்கிழமை (நவம்பர் 26) மதியம் மூண்ட தீ இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது.
அதில் இதுவரை 65 பேர் மாண்டனர். சுமார் 300 நபர்களுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 70 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சுமார் 900 பேர் ஆதரவு முகாம்களில் உள்ளனர்.
சீன அதிபர் ஸீ ஜின்பிங் முழுமூச்சில் அனைத்தும் செயல்படவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
தீ மூண்டதன் காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் மரணம் விளைவித்த குற்றத்தின்பேரில் மூவரைக் கைது செய்துள்ளனர்.
அங்கு பணியில் அமர்த்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள், ஒரு பொறியியல் ஆலோசகர் ஆகியோர் அந்த மூவர் என்று காவல்துறை கூறியது. அவர்களின் அலட்சியம் இந்த தீ விபத்துக்கும் மரணங்களுக்கும் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
ஹாங்காங் நேரப்படி மதியம் 2.45 மணிக்கு பெரும் வெடிச் சத்தத்துடன் தீ மூண்டுள்ளது. மாண்டோரில் பணியில் இருந்த தீயணைப்பு வீரர் ஒருவரும் அடங்குவார்.
1983ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்த வீடமைப்புப் பேட்டையில் உள்ள எட்டு 32 மாடிகள் கொண்ட மக்கள் குடியிருப்புக் கட்டடங்களில் சீரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. அங்கு பயன்படுத்தப்பட்ட மூங்கில் சாரக்கட்டுகளிலும் பச்சைநிற மறைப்புகளிலும் தீ மூண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
அந்த வட்டாரத்தில் உள்ள சாலைகள், பள்ளிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. ஹாங்காங்கில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்துள்ள மிக மோசமான தீ விபத்தாக இது கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விபத்து ஹாங்காங்கில் பொதுமக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. ஏனெனில் சீரமைப்புப் பணிகளுக்கு குடியிருப்பாளர்கள் S$50 மில்லியன் (HK$ 330 மில்லியன்) மதிப்புள்ள கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.
மேலும் கட்டம் கட்டமாக பயன்பாட்டில் இருந்து விலக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட மூங்கில் சாரக்கட்டுகள் இந்தக் கட்டடங்களில் உபயோகப்பட்டுள்ளன.
தைபோ மாவட்டத்தின் புறநகரில் அந்த வீடமைப்பு அமைந்துள்ளது. தீ மூண்டு 10 மணி நேரமாகியும் இன்னும் அணைக்கப்படவில்லை. ஏழு கட்டடங்களில் தீ எரிந்துகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரவு முழுவதும் போராடி வரும் தீயணைப்பு வீரர்களால் மேல் மாடிகளை நெருங்க முடியவில்லை. அந்த 8 கட்டடங்களில் 2,000 வீடுகள் இருக்கின்றன. ஹாங்காங் அரசாங்க நிர்வாகத் தலைவரான ஜான் லீ மறைந்த தீயணைப்பு வீரருக்கும் மாண்டோருக்கும் இரங்கல் தெரிவித்தார்.
தீ விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்பது, காயமுற்றோருக்கு ஆதரவு தருவது, பிறகு குணமடைவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதே அரசாங்கத்தின் உடனடி இலக்கு என்றார். மேலும், முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விபத்தின் தீவிரத்தால் மரண எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

