ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவான ‘டென்சஸ் 88’, அந்நாட்டின் ஆறு மாநிலங்களில் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 22 முதல் 52 வயதுடைய 11 சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளது.
இணையம் வாயிலாக ஆள் சேர்ப்பது, தீவிரவாதப் பிரசாரம் செய்வது, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்குவது போன்றவற்றில் அவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அந்நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்கியிருப்பதை இந்தக் கைது நடவடிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கிய இந்த நடவடிக்கை, மேற்கு ஜாவா, மத்திய ஜாவா, மத்திய சுலாவேசி, தெற்கு சுலாவேசி, ரியாவ், வடக்கு மலுக்கு ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டதாக அக்டோபர் 4ஆம் தேதி ‘டென்சஸ் 88’ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கைது செய்யப்பட்டவர்கள் ‘தவ்லா இஸ்லாமியா’ (ஐசிஸ்), இதர பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது. இணையவழிச் சந்திப்புகள் மூலம் வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவாளர்களை இணைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தென்கிழக்காசியாவில் இளையர்டையே தீவிரவாதம் அதிகரித்து வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறாதபோதிலும்,மின்னிலக்கத் தளங்கள் மூலம் தீவிரவாதக் குழுக்கள் ஆள்களைச் சேர்ப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
