ஜகார்த்தா: ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய 15 சந்தேக நபர்களை இந்தோனீசியப் பயங்கரவாதத் தடுப்புக் காவல் பிரிவான ‘டென்சஸ் 88’ கைது செய்துள்ளது.
நவம்பர் 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஆச்சே, மேற்கு சுமத்ரா, ரியாவ், மேற்கு ஜாவா, மத்திய ஜாவா, மேற்கு நுசா தெங்காரா ஆகிய ஆறு மாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக அப்பிரிவு புதன்கிழமை (நவம்பர் 18) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மத்திய ஜாவாவில் அதிகபட்சமாக நால்வர் பிடிபட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 24 வயது இளையரும் 66 வயது முதியவரும் அடங்குவர்.
பயங்கரவாதக் கட்டமைப்புகள் விரிவடைவதையும் இணையவழிப் பிரசாரம், ஆள்சேர்ப்பு, நிதி திரட்டல், ஆயுதப் பயிற்சி ஆகியவற்றையும் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ‘டென்சஸ் 88’ பிரிவுப் பேச்சாளர் மைந்திரா ஏகா வர்தனா தெரிவித்தார்.
மின்னிலக்கச் சாதனங்கள் வழி சிறார், பதின்ம வயதினர் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்படுவதைத் தடுக்கப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டுக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 28 தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பிறகு அந்நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் எதுவும் பதிவாகவில்லை.
