ஜெருசலம்: 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின்போது, இசை விழாவிலிருந்து காதல் ஜோடி ஒன்றைக் கடத்திச் சென்ற காணொளியில் இடம்பெற்ற பாலஸ்தீனப் பயங்கரவாதியை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றுள்ளன.
இந்த விவரத்தை இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 27) அதிகாரபூர்வமாக அறிவித்தது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று நோவா இசை விழாவில், நுவா அர்காமணி, அவரது காதலர் அவினாடன் ஓர் ஆகிய இருவரையும் பயங்கரவாதிகள் கடத்திச் செல்லும் காணொளி இணையத்தில் பரவலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் கடத்தப்பட்ட அர்காமணி, 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ராணுவ நடவடிக்கையின்போது மீட்கப்பட்டார். அவரது காதலர் அவினாடன் ஓர், 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், காஸாவின் நுசெய்ராட் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில், சஹேர் நிடால் லத்ஃபி சகர் என்ற பயங்கரவாதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 27) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவர் காஸா பகுதியில் இயங்கும் உலகளாவிய ஜிகாதிய அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்காமணி மற்றும் அவினாடன் ஜோடியைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் இந்த சஹேர்தான் என்று இஸ்ரேலிய ராணுவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரபூர்வ கணக்கீடுகளின்படி, 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று நடைபெற்ற நோவா இசை விழா தாக்குதலின்போது, ஹமாஸ் மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் சேர்ந்து குறைந்தபட்சம் 370 பேரைக் கொன்றதோடு 44 பேரைப் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது
