ராக்கெட் தொழில்நுட்பங்களுடன் ‘ரோட்ஸ்டர்’ கார்: டெஸ்லாவின் அறிமுகம்

ராக்கெட் தொழில்நுட்பங்களுடன் ‘ரோட்ஸ்டர்’ கார்: டெஸ்லாவின் அறிமுகம்

படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2026 - 4:20 pm

1 mins read

சான் ஃபிரான்சிஸ்கோ: ராக்கெட் பாணி உந்துவிசைகளுடன் வடிவமைக்கப்பட்ட தனது புதிய ‘ரோட்ஸ்டர்’ காரை டெஸ்லா நிறுவனம் வியாழக்கிழமை (அக்டோபர் 15) அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் உற்பத்தியை 2028ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது அடுத்த தலைமுறை ‘ஸ்போர்ட்ஸ்’ வகை மின்சார காரை முதன்முதலில் அறிமுகப்படுத்தி பத்து ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் டெஸ்லா நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த புதிய கார் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெஸ்லா தலைமை நிர்வாகி இலான் மஸ்க்கின் தமது ‘ஸ்பேஸ்எக்ஸ்’ ராக்கெட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த வெள்ளை நிற இரண்டு இருக்கை வாகனம், சாய்வுப் பாதையில் தலைகீழாகச் சென்றதுடன், காற்றில் சுழன்று, உள்ளமைக்கப்பட்ட உந்துவிசைகளைப் பயன்படுத்தித் தரையிறங்கியது.

நிகழ்ச்சியின் பிற்பகுதியில், இந்த உந்துவிசைகளைப் பயன்படுத்தி அது ஒரு லாரி மற்றும் பிற வாகனங்களுக்கு மேல் பாய்ந்து, காற்றில் திருப்பங்களைச் செய்து காட்டியது.

‘ரோட்ஸ்டர்’ காரை அறிமுகம் செய்வதற்கான தேதி பலமுறை தள்ளிப்போன பின்னர் ஒருவழியாக நடந்தேறி உள்ளது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மனிதர்களின் பங்களிப்பு குறைவாகவோ அல்லது இல்லாமலோ வாகனங்களை இயக்கக்கூடிய தானியங்கித் தொழில்நுட்பத்திலும் இயந்திர மனிதத் துறையிலும் டெஸ்லா கவனம் செலுத்தி வரும் நிலையில், புதிய ராக்கெட் ரக காரின் அறிமுகம் நிகழ்ந்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமான மூன்றாம் காலாண்டு நிதி முடிவுகள் வெளியாவதற்குச் சில நாள்களுக்கு முன்னர் இது நிகழ்ந்திருப்பதும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்