10,000 பயணப்பெட்டிகளை ஒப்படைக்கத் திணறும் தாய் ஏர்வேஸ்

10,000 பயணப்பெட்டிகளை ஒப்படைக்கத் திணறும் தாய் ஏர்வேஸ்

படம்: ராய்ட்டர்ஸ்

02 Oct 2026 - 12:00 pm

1 mins read

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகரின் முக்கிய அனைத்துலக விமான நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் 10,000 பயணப்பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகளைத் தாய் ஏர்வேஸ் நிறுவனம் துரிதமாகச் செய்துவருகிறது.

கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து பல பயணிகள் சுவர்ணபூமி விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டனர்.

உரிய பயணிகளிடம் பயணப்பெட்டிகளை ஒப்படைக்க ராணுவ அதிகாரிகளும் தற்போது களமிறங்கியுள்ளனர்.

பயணப்பெட்டிகள் வருகையாளர் கூடத்தில் நிரம்பி வழியும் வேளையில், காணாமற்போன தங்கள் பெட்டிகளைப் பயணிகள் மும்முரமாகத் தேடிவருகின்றனர்.

களைத்துப்போன ஊழியர்களும் பயணிகளின் சினத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகினர். அதன் காரணமாக ஒருசில ஊழியர்கள் அழும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

செப்டம்பர் 26ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிவரை தேங்கியுள்ள பயணப்பெட்டிகளை முழுமையாக அப்புறப்படுத்த தாய் ஏர்வேசுக்கு எப்படியும் மூன்றிலிருந்து நான்கு நாள்கள் தேவைப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ஃபிஃபாட் ரட்சகிபிரகார்ன் கூறினார்.

இதுவரை கிட்டத்தட்ட 1,800 பயணப்பெட்டிகள் உரிய பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. புதிதாக எந்தப் பயணப்பெட்டிகளும் விமான நிலையத்தில் தேங்கி நிற்கவில்லை.

இன்னும் இறக்கி வைக்கபடாத 4,000 பயணப்பெட்டிகளைச் சமாளிக்க கிட்டத்தட்ட 100 ராயல் தாய் ஆகாயப்படை அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர்.

பேங்காக்கில் மூன்று நாள்களுக்குக் கொட்டித்தீர்த்த மழையால் 12 அங்குலத்திற்கும் அதிகமாக வெள்ள நீர் பெருக்கெடுத்தது.

அதையடுத்து விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
பயணப்பெட்டிவிமான நிலையம்தாய்லாந்துமழைவெள்ளம்