வைரம்போல மின்னும் இடது கண் உடைய ஆண் பூனையைக் காட்டும் காணொளிகள் டிக்டாக் வலைத்தளத்தில் பரவி வருகின்றன.
இந்தப் பூனை வளமையைக் கொண்டுவரும் என்று நம்பப்படுவதால், இதை நன்கு கவனித்துக்கொள்ளுமாறு இணையவாசிகள் பலரும் இதன் உரிமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தப் பூனையை வெவ்வேறு கோணங்களில் காட்டும் நான்கு காணொளிகளை டிக்டாக் பயனர் ஒருவர் பதிவிட்டார். புதன்கிழமை (ஜனவரி 25) பிற்பகல் நிலவரப்படி, அவற்றில் குறிப்பிட்ட ஒரு காணொளி 1.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
தாய்லாந்தில் பிப்ரவரி 1ஆம் தேதி 'லாட்டரி' குலுக்கல் நடைபெறவுள்ள வேளையில், இணையவாசிகள் சிலர் அதிர்ஷ்ட எண்களை ஊகிக்கத் தொடங்கிவிட்டனர்.
காணொளியைப் பதிவிட்ட டிக்டாக் பயனரின் பெயரில் குலுக்கல் எண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.
வைரம்போல பிரகாசிக்கும் கண் உடைய பூனையின் சொந்தக்காரருக்கு வைரக்கற்கள் கிடைக்கும் என்பது தாய்லாந்தில் பலருடைய ஐதீகம். 1972ல் வெளியான தாய்லாந்துத் திரைப்படமான 'கேட்ஸ் ஐ டைமண்ட்'டிலும் இதே நம்பிக்கைதான் சித்திரிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், பூனையிடம் உள்ள 'வைரக்கண்' அதிர்ஷ்டத்தால் அல்ல, மாறாக உயர் கண் அழுத்த நோயால் (glaucoma) ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

