காவல் நிலையத்திலேயே 'மசாஜ்' சேவை!

காவல் நிலையத்திலேயே 'மசாஜ்' சேவை!

1 mins read
b5bea33c-5769-46b4-8127-18047beb0b2d
புகாரளிக்க வந்த ஒருவரின் உடம்பைப் பிடித்துவிடுகிறார் தாய்லாந்துக் காவல்துறை அதிகாரியான லெப்டினென்ட் பக்ரேன்கிரிட் தோங்சுக். படம்: தி தாய்கர் -

பேங்காக்: புகார் அளிக்க காவல்நிலையத்திற்கு வருவோரின் மனவுளைச்சலைத் தணிக்கும்விதமாக அங்கேயே அவர்களுக்கு உடம்பு பிடித்துவிடப்படுகிறது.

இப்படி ஒரு வியப்பான சேவையை தாய்லாந்தின் மூவாங் மாவட்டத்தில் உள்ள நோங் ட்ருட் காவல்நிலையம் வழங்குவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தக் காவல் நிலையத்தில் அதிகாரியாக உள்ள 58 வயது லெப்டினென்ட் பக்ரேன்கிரிட் தோங்சுக் 'தாய் மசாஜ்' சேவையில் பயிற்சியும் நிபுணத்துவமும் பெற்றவர்.

புகார் அளிக்கத் தமது காவல் நிலையத்துக்கு நேரடியாக வருவோரில் பொரும்பாலோர் மிகுந்த மனவுளைச்சலுடன் காணப்படுவதைக் கவனித்து வந்த அவர், அதற்கு ஒரு தீர்வுகாண யோசித்தார்.

'வேதனை தீர்க்கும் உடல்தளர்த்தல்' எனும் திட்டத்தைத் தொடங்கியதோடு அங்கு வரும் பொதுமக்களுக்கு அவரே உடல்தளர்த்தும் (மசாஜ்) சேவையை வழங்கி வருவதாக 'பேங்காக் போஸ்ட்' செய்தி தெரிவித்தது.

தங்களுக்கு நேர்ந்த துன்பத்தை முறையிட வருவோரின் மனத்தை அமைதிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அது கூறியது.