பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் பயணிகளின் பையிலிருந்து பணத்தைத் திருடியதாக நம்பப்படும் மூன்று மங்கோலியர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
37 முதல் 51 வயது வரையிலான மூன்று சந்தேக ஆடவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக விமான நிலைய இயக்குநர் கிட்டிபோங் கிட்டிகாஜோர்ன் தெரிவித்தார்.
இரண்டு ஜப்பானிய ஆடவர்கள், ஒரு தாய்லாந்துப் பெண், ஒரு கனடிய ஆடவர் தங்களுடைய பணப்பைகளையும் பணத்தையும் காணவில்லை என்று கடந்த வாரம் புதன்கிழமை மாலையிலிருந்து வியாழன் காலை வரை புகார்கள் வந்ததாகவும் கண்காணிப்புக் கருவியில் சந்தேக ஆடவர்கள் மூவரும் அடையாளம் காணப்பட்டதாகவும் திரு கிட்டிபோங் தெரிவித்தார்.
காணாமல்போன பணத்தின் மதிப்பு 260,000 பாட் (S$10,000) என நம்பப்படுகிறது.
சந்தேக ஆடவர்கள் மூவரும் இரு பெண்களின் உதவியுடன் பணத்தைத் திருடினர். தலைமறைவான அந்தப் பெண்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக, விமான நிலையத்தில் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


