பேங்காக்: தாய்லாந்து உச்ச நீதிமன்றம் முன்னாள் பிரதமரும் பெருஞ் செல்வந்தருமான தக்சின் ஷினவாத் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் எனச் செப்டம்பர் 9ஆம் தேதி தீர்ப்பளித்தது.
அதனையடுத்து, சிறைவாசம் அனுபவித்துவரும் தக்சினின் உடல் நலன் குறித்தும் அவருக்கு வழங்கப்படவுள்ள பணிகள் பற்றிய விவரங்களையும் வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 11) அந்நாட்டுத் சிறைத்துறையின் துணைத் தலைமை இயக்குநரும் பேச்சாளருமான லெஃப்டினண்ட் கர்னல் ஷேன் கஞ்சனப்பா தெரிவித்தார்.
தற்போது ஐந்து நாள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தக்சின், அது நிறைவடைந்தபின் சிறை கைதிகளின் தனிப்பட்ட திறன், விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்குப் பணிகள் வழங்குவதுபோன்று இவருக்கும் வேலை ஒதுக்கப்படும் என அவர் கூறினார்.
தக்சினுக்கு மொழிகளைக் கற்பிக்கும் பணி வழங்கப்படலாம் எனக் கூறிய அவர், சிறை நடவடிக்கைகளில் பங்காற்றவும் சக கைதிகளின் மறுவாழ்வுக்கு உதவவும் அவரிடம் சிறைத்துறை கேட்கலாம் என்றார்.
மேலும், அவருடைய உடல் நலனும் மன நலனும் நன்றாக இருப்பதாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் நன்றாக உறங்குவதாகவும், இரு வேக வைத்த முட்டை, காப்பி ஆகியவற்றை காலை உணவாக எடுத்துகொள்வதாகவும் தக்சினின் சிறை வாழ்க்கையை திரு ஷேன் விளக்கினார்.