தம்மிடம் 12 மில்லியன் பாட் (S$470,000) மதிப்புடைய லாட்டரி பரிசை மறைத்த மனைவிக்கு எதிராக தாய்லாந்தில் ஆடவர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.
ஆனால், தமக்கு லாட்டரி குலுக்கலில் பரிசு வெல்வதற்கு முன்பே கணவரும் தாமும் பிரிந்துவிட்டதாகவும் தாம் மறுமணம் செய்துகொண்டதாகவும் அந்த மாது கூறினார்.
மற்றொருபுறம், மனைவி தம்மைவிட்டு பிரிந்தது பற்றி தமக்குத் தெரியாது என்று அந்த ஆடவர் சொன்னார். எனினும், அதிகாரபூர்வ திருமணச் சான்றிதழில் தாங்கள் கையெழுத்திடவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
நரின், 47, எனும் அந்த ஆடவர், இருபது ஆண்டுகளுக்கு முன்பு சவீவன், 43, என்பவரை மணந்தார். அத்தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், சவீவனுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழக்கறிஞர் ஒருவரிடமிருந்து கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) நரின் ஆலோசனை நாடினார்.
2 மில்லியன் பாட் (S$78,000) கடனை அடைப்பதற்காக 2014ல் நரினும் சவீவனும் தென்கொரியாவுக்கு இடம்பெயர்ந்தனர்.
பின்னர் தம்முடைய பிள்ளைகளுடன் இருப்பதற்காக சவீவன் தாய்லாந்து திரும்பினார். தென்கொரியாவில் தொடர்ந்து வேலை பார்த்து வந்த நரின், மாதந்தோறும் 27,000 முதல் 30,000 பாட் வரை (S$1,100 முதல் S$1,170 வரை) குடும்பத்துக்கு அனுப்பி வந்தார்.
பின்னர், லாட்டரி குலுக்கலில் தம் மனைவி 12 மில்லியன் பாட் பரிசு வென்ற செய்தியை தம் மகள்களிடமிருந்து நரின் தெரிந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், சவீவன் இச்செய்தியை நரினிடம் மறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சவீவனிடம் விளக்கம் கேட்பதற்காக மார்ச் 3ஆம் தேதி நரின் தாய்லாந்துக்குத் திரும்பினார்.
ஆனால், பிப்ரவரி 25ஆம் தேதி காவல்துறை அதிகாரி ஒருவரை சவீவன் திருமணம் செய்துகொண்டதை அறிந்து நரின் அதிர்ச்சியடைந்தார்.
"எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் திருமணம் செய்துகொண்டு 20 ஆண்டுகளான நிலையில், என் மனைவி என்னிடம் இப்படி செய்துவிடுவார் என்பதை நான் கனவில் நினைத்துப் பார்க்கவில்லை," என்று நரின் வேதனை தெரிவித்தார்.


