பேங்காக்: சுற்றுப்பயணத் துறையிலிருந்து கிடைக்கும் வருவாயைப் பெருக்கத் தாய்லாந்து முனைகிறது.
உள்நாட்டுப் பயண ஊக்கத்தொகைத் திட்டத்தின்மூலம் கூடுதலாக 20 பில்லியன் பாட் ($765 மில்லியன்) வருவாய் ஈட்ட தாய்லாந்து இலக்கு வகுத்துள்ளது.
வெளிநாட்டுப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது; எரிசக்திச் செலவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பொருளியலுக்கு முக்கிய இயந்திரமாக விளங்கும் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தத் தாய்லாந்து அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஹோட்டல் உள்ளிட்ட சுற்றுலாச் செலவுகளுக்கு உதவித்தொகை வழங்க அரசாங்கம் கிட்டத்தட்ட 4 பில்லியன் பாட் செலவிடத் திட்டமிட்டுள்ளதாகச் சுற்றுலா, விளையாட்டுத் துறை அமைச்சர் சுரசக் பஞ்சாரோயன்வாராக்குன் தெரிவித்தார்.
ஒரு மில்லியன் சலுகைகளை உள்ளடக்கிய உதவித்தொகைத் தொகுப்புத் திட்டம், செப்டம்பர் 22ஆம் தேதி அமைச்சரவையின் ஒப்புதலுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துலகப் பயணிகளின் வருகை மெதுவடைந்துள்ளதாலும் பெட்ரோல் விலை உயர்வால் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதாலும் சுற்றுலாத்துறை பல சவால்களைச் சந்தித்துவருகிறது. அவற்றைச் சமாளிக்கத் தாய்லாந்து, உள்நாட்டுப் பயணிகளை அதிக அளவில் நம்பியிருப்பதை இந்நடவடிக்கை காட்டுகிறது.
சுற்றுலாத்துறை தாய்லாந்தில் பல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. அத்துடன் அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரமாகவும் அது விளங்குகிறது. அத்துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஏற்கெனவே குறைந்த வளர்ச்சியை எதிர்கொண்டுள்ள நாட்டின் பொருளியலுக்குப் பெருங்கவலையாக உருவெடுத்துள்ளது.
இம்மாதம் 12ஆம் தேதி வரை தாய்லாந்துக்கு 21.7 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் சென்றுள்ளனர். இது முந்திய ஆண்டைவிட 3.4 விழுக்காடு குறைவு. அதேவேளையில், அவர்களின் செலவினம் 1.9 விழுக்காடு குறைந்து 1.06 டிரில்லியன் பாட்டாக உள்ளது.
உள்நாட்டுப் பயணம் சற்றுச் சிறப்பாக உள்ளது; தாய்லாந்துவாசிகளின் பயணங்கள் 2 விழுக்காடு அதிகரித்து 142 மில்லியனாக இருக்கின்றன. செலவினம் 1.9 விழுக்காடு கூடுதலாகி 824.6 பில்லியன் பாட்டுக்கு உயர்ந்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ், அரசாங்கம் தங்குமிடச் செலவில் 2,000 பாட் வரை தள்ளுபடி வழங்கும்.
மேலும், உணவகங்கள், கடைகள், சுற்றுலா நடவடிக்கைகளுக்காகப் பயணிகள் 2,000 பாட் வரை கூட்டுக் கட்டணப் பற்றுச்சீட்டுகளைப் பெறுவர்.
இரண்டாம் நிலை சுற்றுலாத்தலங்களில் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
ஒருவர் அதிகபட்சம் ஐந்து சலுகைகளைப் பயன்படுத்தலாம்.
சலுகைகள் நவம்பர் 1 முதல் டிசம்பர் 15 வரை வழங்கப்படும்; புத்தாண்டின் உச்சகட்டப் பயணக் காலத்தில் இவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும். பின்னர் மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் பிப்ரவரி இறுதிவரை சலுகைகள் தொடரும் எனக் கூறப்பட்டது.

