பேங்காக்: தாய்லாந்தில் பிற்பகல் நேரங்களில் மதுபானம் விற்க விதிக்கப்பட்ட தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலச் சோதனைத் திட்டமாக அது செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணிவரை தாய்லாந்தில் உள்ள கடைகளில் மதுபானம் விற்பனை செய்யலாம்.
இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் மதுபான விற்பனையால் என்னென்ன தாக்கம் ஏற்படுகிறது என்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாகப் பிற்பகல் நேரங்களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்றிருந்த சட்டம் தற்போது தாய்லாந்தில் தளர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும் மதுபானம் விற்பனை தொடர்பாக விதிக்கப்பட்ட மற்ற விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படும் என்று தாய்லாந்து தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைப்படி காலை 11 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை தாய்லாந்தில் தொடர்ந்து மதுபானம் விற்பனை செய்யலாம். சமய விடுமுறை நாள்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதியில்லை.
பிற்பகல் நேரங்களில் அரசு ஊழியர்கள் மதுபானம் குடிக்கக்கூடாது என்பதற்காக முன்னதாக மதுபான விற்பனை தடை செய்யப்பட்டது. ஆனால் வெளிநாட்டுப் பயணிகளிடையே இந்த விதிமுறை அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் இப்போது தாய்லாந்து விதிமுறையைத் தளர்த்துகிறது.

