‘யுனெஸ்கோ’ உலக பாரம்பரியத் தளமான பிரியா விஹார் கோயில், 2025ல் நடந்த எல்லை மோதல்களின் போது பெரும் சேதத்தை சந்தித்தது.
இந்தக் கோயில் வளாகத்தில் 562 சேதமடைந்த இடங்களையும் குண்டுவீச்சால் ஏற்பட்ட 501 பள்ளங்களையும் அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
பிரியா விஹார் தேசிய ஆணையம் சேகரித்த தரவுகளின் அடிப்படையில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையம் ‘ஐகோமோஸ்’ ஆலோசனைக் குழு ஆகியவை இணைந்து தயாரித்த அறிக்கையை மேற்கோள் காட்டி, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் நெத் பீக்ட்ரா சனிக்கிழமை (செப்டம்பர் 12) இந்த விவரங்களை எடுத்துரைத்தார்.
2025 ஜூலையில் நடந்த மோதல்களின் போது 142 இடங்கள் சேதமடைந்ததாகவும் டிசம்பரில் கூடுதலாக 420 இடங்கள் சேதமடைந்ததாகவும் அந்த அறிக்கை பதிவு செய்துள்ளது.
முந்தைய மோதல்களை விட இந்த அழிவின் அளவு மிகப் பெரியது என்றும், இது தளத்தின் கட்டமைப்பு, அசல் தன்மை, அதன் தனித்துவமான மதிப்பைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றும் யுனெஸ்கோ மற்றும் ஐகோமோஸ் முடிவு செய்துள்ளன.
கம்போடிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் மேற்கொண்ட தொழில்நுட்ப ஆய்வுகளில், வான்வழி குண்டுகள், பீரங்கித் தாக்குதல்களும் ஆளில்லா வானூர்தி மூலம் ஏற்பட்ட 501 பள்ளங்கள் கண்டறியப்பட்டன.
‘எம்கே82’ குண்டுகள், கொத்துக் குண்டுகள் 105 மில்லிமீட்டர் முதல் 155 மில்லிமீட்டர் வரையிலான பீரங்கி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை ‘சிஎம்ஏசி’ குழுக்கள் ஆவணப்படுத்தியுள்ளன.
இந்தத் தாக்குதல்களால் பழங்கால பாதை, அடித்தளங்கள், சுவர்கள், தூண்கள், நிலைக்கதவு மேல்வளைவுகள், முக்கோண முகப்புகள் கோயிலின் ஐந்து கோபுரங்களின் சில பகுதிகள் சேதமடைந்தன.
ஐந்தாவது கோபுரத்தில் நடைபெற்று வந்த கம்போடியா-இந்தியா பாதுகாப்புத் திட்ட தளம் அழிக்கப்பட்டது. தாக்குதலுக்குப் பிந்தைய புகைப்படங்களில், கட்டமைப்பு சேதத்துடன் ஒரு கட்டுமான கிரேனும் சரிந்து கிடப்பதைக் காண முடிந்தது.

