பேங்காக்: கம்போடியாவுக்குச் சீனா அண்மையில் போர்ப் பீரங்கிகளை வழங்கியது குறித்துத் தாய்லாந்து சீனாவிடம் தனது கவலையைப் பதிவு செய்துள்ளது.
2025ஆம் ஆண்டில் தாய்லாந்து - கம்போடியா இடையே நடந்த எல்லைக் கலவரங்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சண்டைநிறுத்தம் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதாகத் தாய்லாந்து கூறியது.
தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது, சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் தமது கவலையைத் தெரிவித்தார்.
தாய்லாந்துப் பேராளர்கள் திங்கட்கிழமை (ஜூலை 20) சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியாவ் செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்தார்.
“பீரங்கிகளின் விநியோகம் குறித்து கம்போடியா வெளியிட்ட தகவல்கள் நமக்குக் கவலையளிக்கின்றன. தற்போதைய சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இக்கட்டான நிலையில் இருக்கிறது; சண்டைநிறுத்தம் பலவீனமான நிலையிலும் உள்ளது,” என்று திரு சிஹாசக் கூறினார்.
“இந்தப் பீரங்கிகளின் விநியோகத்தைக் கம்போடியாவுக்குச் சாதகமாக அமையும் வகையில் வழங்குவது, தற்போதைய தாய்லாந்து - கம்போடியா நிலைமைக்குப் பலன் அளிக்காது,” என்றும் அவர் கூறினார்.
தற்போது நடப்பில் உள்ள கூட்டு ராணுவப் பயிற்சி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சீனாவுக்குச் சொந்தமான 39 ‘டி-59டி’ போர்ப் பீரங்கிகள் கம்போடியாவுக்கு வழங்கப்பட்டதாக ஜூன் மாதத்தில் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, தாய்லாந்தின் கவலைகள் எழுந்துள்ளன.
இருப்பினும், அந்தப் போர்ப் பீரங்கிகள் அதன்பிறகு எல்லைப் பகுதிக்கு மாற்றப்பட்டதாகத் தெரியவில்லை என்று தாய்லாந்து அதிகாரிகள் கூறினர்.
2025ஆம் ஆண்டின் இறுதியில் எட்டப்பட்ட இரண்டாவது சண்டைநிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும், தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே பதற்றநிலை தொடர்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை, டிசம்பர் மாதங்களில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே பல நாள்கள் மூண்ட சண்டை, அவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த மிக மோசமான மோதல்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.

