பேங்காக்: வரும் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தாய்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாய்லாந்தின் பொது ஒளிபரப்பு நிறுவனமான தாய் பிபிஎஸ் (Thai PBS), பிபிடிவி உள்ளிட்ட ஊடகங்கள் திங்கட்கிழமை (நவம்பர் 15) இத்தகவலை வெளியிட்டன.
நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் செய்ர்ன்விராக்குல்லுக்குச் சென்ற வாரம் அந்நாட்டின் மன்னராட்சி அனுமதி வழங்கியது. அதனையடுத்து 45லிருந்து 60 நாள்களுக்குள் தேர்தலை நடத்தவேண்டும்.
தேர்தல் நடத்தப்படும் தேதி குறித்துப் பேச தாய்லாந்துத் தேர்தல் ஆணையம் சந்திப்பு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆணையம் உறுதிப்படுத்தவில்லை.
எதிர்க்கட்சியான மக்கள் கட்சிக்கும் (People’s Party) திரு அனுட்டினுக்கும் சென்ற வாரம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனையடுத்து எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்னரே தாய்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மக்கள் கட்சி, தாய்லாந்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆகப் பெரிய தரப்பாகும். கம்போடிய எல்லையில் பூசல் மோசமடைந்துவரும் வேளையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க அக்கட்சி குரல் கொடுத்திருந்தது.
திரு அனுட்டின் கடந்த செப்டம்பர் மாதம் தாய்லாந்துப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அதற்கு மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது; கைமாறாக அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யுமாறும் வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறும் அந்தக் கட்சி கேட்டுக்கொண்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
சுய ஆட்சி முறையைத் தற்காத்துக்கொள்ள கம்போடியாவுடன் ராணுவ ரீதியான மோதலில் தங்கள் நாடு ஈடுபட்டுள்ளதாக தாய்லாந்து மக்களிடையே தேசியவாத உணர்வு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது, அனுபவம்வாய்ந்த அரசியல் தலைவரான 59 வயது அனுட்டினுக்குச் சாதகமாக அமையலாம் என்று நம்பப்படுகிறது.

