திடலில் மின்னல் தாக்கித் தாய்லாந்துக் காற்பந்து ஆட்டக்காரர் மரணம்

திடலில் மின்னல் தாக்கித் தாய்லாந்துக் காற்பந்து ஆட்டக்காரர் மரணம்

படம்: FCYALAOFFICIAL/FACEBOOK, COURTESY OF ABDUL BASIR CHEPOR

05 Aug 2026 - 5:17 pm

1 mins read

சுங்கை கோலோக்: தாய்லாந்தில் ஒரு திடலில் விளையாடியபோது மின்னல் தாக்கியதால் காற்பந்தாட்டக்காரர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) மரணமடைந்தார்.

அவரோடு திடலில் அருகில் இருந்த மேலும் 12 பேரும் காயமடைந்தனர். அதனைத் தாய்லாந்துக் காவல்துறை உறுதிப்படுத்தியது.

தென் தாய்லாந்தில் உள்ள சுங்கை கோலோக் பகுதியில் சாம்கொல்ட்ஸ் குழுவுக்கும் அபு எக்ஸ் நொங் சிரின் குழுவுக்கும் போட்டி நடந்தது. தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் உள்ளூர்க் குழுக்களுக்கு இடையே கோலோக் கிண்ணத்துக்காக நடக்கும் வட்டாரப் போட்டி அது.

அன்றைய தினம் சன்டிபாப் விளையாட்டரங்களில் போட்டி நடந்தது.

ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோது மாலை 5.30 மணியளவில் சாம்கொல்ட்ஸ் குழுவின் 24 வயது சோவ்யான் அவேய் மீது திடீரென மின்னல் தாக்கியது. இணையத்தில் பகிரப்பட்ட காணொளியில் எதிரணியான அபு எக்ஸ் நொங் சிரியின் ‘பெனால்டி’ பகுதியில் மின்னல்ஒளி தோன்றுவதைப் பார்க்கமுடிந்தது.

கறுப்பு வெள்ளைச் சீறுடை அணிந்திருந்த சோவ்யானின் சக குழுவினர் அவரை நினைவுதிரும்ப வைப்பதற்குத் திடலில் சோவ்யானைப் புரட்டியும் திருப்பியும் பார்த்தனர்.

அங்கிருந்த அவசர மருத்துவக் குழுவினர் அவரைக் காப்பாற்ற ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் அவரின் உயிர் அங்கேயே பிரிந்ததாகச் சுங்கை கோலோக் காவல்துறைத் தலைவர் சிரிகுன்ட் கூறியதாக பெர்னாமா ஊடகம் தெரிவித்தது.

காற்பந்தாட்டக்காரர் ஒருவர் உட்பட காயமடைந்த 12 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
காற்பந்துமின்னல்மரணம்தாய்லாந்துமலேசியாபோட்டிகிண்ணம்