கடலுணவு வர்த்தகத் தடைகள் குறித்து தாய்லாந்து, மலேசியா மோதல்

கடலுணவு வர்த்தகத் தடைகள் குறித்து தாய்லாந்து, மலேசியா மோதல்

2 mins read
f0deebd2-3790-4b40-8e7c-2b8aa7f0a1e5
முக்கிய எல்லைக் கடக்கும் இடம் ஒன்றில் மலேசியச் ‘சீபாஸ்’ மீன் ஏற்றுமதிகளுக்கான பரிசோதனையைத் தாய்லாந்து மே மாதத்தில் அதிகரித்தபோது கருத்து வேறுபாடுதொடங்கியது. - படம்: அன்ஸ்பிளாஷ் (UNSPLASH)

கோலாலம்பூர்: மலேசியா, தாய்லாந்து ஆகியவற்றுக்கு இடையிலான வர்த்தகத் தகராறு தீவிரமடைந்து வரும் நிலையில், அந்த விவகாரத்தை உலக வர்த்தக அமைப்பில் எழுப்பக்கூடும் என்று தாய்லாந்து தெரிவித்துள்ளது.

ரசாயன, நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் எச்சங்களை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, முக்கிய எல்லையைக் கடக்கும் இடம் ஒன்றில் மலேசிய ‘சீபாஸ்’ (Sea Bass) மீன் ஏற்றுமதிகளுக்கான பரிசோதனையைத் தாய்லாந்து மே மாதத்தில் அதிகரித்தபோது இந்தச் சர்ச்சை தொடங்கியது.

இந்தக் கூடுதல் சோதனைகளால் சுங்க அனுமதி தாமதமானது; இதனால் புத்தம் புதிய மீன்கள் கெட்டுப்போனதோடு மலேசிய ஏற்றுமதியாளர்களிடமிருந்து புகார்களும் எழுந்தன.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஐந்து வகையான தாய்லாந்து இறால்களின் இறக்குமதியை மலேசியா ஜூன் மாத தொடக்கத்தில் நிறுத்தியது. இந்த நடவடிக்கையானது, தாய்லாந்து ஏற்றுமதியாளர்களுக்கான, ஆண்டுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (12.8 மில்லியன் சிங்கப்பூர் டாலர்) அதிகமான மதிப்புள்ள ஒரு வர்த்தகத்தைத் தடைசெய்துள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள இறால்களைத் தாய்லாந்து மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்தது. அந்நாட்டின் கடல் உணவு ஏற்றுமதியில் இறால் தொழில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்திலேயே, இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், ஆசியான் அல்லது உலக வர்த்தக அமைப்பில் இந்த விவகாரத்தை எழுப்பலாம் என்று தாய்லாந்தின் துணைப் பிரதமரும் வர்த்தக அமைச்சருமான சுபாஜி சுதம்பன் புதன்கிழமை (ஜூன் 10) தெரிவித்தார்.

ஆலோசனைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக இறக்குமதியை உடனடியாக நிறுத்தும் மலேசியாவின் முடிவை விமர்சித்த அவர், இந்நடவடிக்கை பொருத்தமற்றது என்று விவரித்தார்.

புளூம்பெர்க்கிற்கு அளித்த அறிக்கையில், கட்டுப்பாடுகள் மே மாதத்தில் அறிவிக்கப்பட்டு ஜூன் 1ல் நடைமுறைக்கு வந்தன என்றும், இதனால் ஏற்றுமதியாளர்கள் தயாராவதற்கும் மாற்றங்களைச் செய்துகொள்வதற்கும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டது என்றும் மலேசியாவின் வேளாண், உணவுப் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் சான் ஃபூங் ஹின் தெரிவித்தார்.

இதற்கான தீர்வை தேடி மலேசியாவிற்குப் பயணம் செய்யத் தயாராக இருப்பதாகத் தாய்லாந்தின் விவசாயத் துறை அமைச்சர் சுரியா ஜங்ருங்ரீங்கிட் கூறினார்.

“நாம் இணைந்து இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும் என்றும் மலேசியாவிற்கான தாய்லாந்து இறால் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க முடியும் என்றும் நான் நம்புகிறேன்,” என்று சுரியா கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ஆசியான்வர்த்தகம்கடல்உணவு