பேங்காக்: தாய்லாந்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, நாட்டின் கடுமையான அரச அவமதிப்புச் சட்டத்தைச் சீர்திருத்தும் முயற்சிகள் தொடர்பான நெறிமுறை மீறல் குற்றச்சாட்டின் பேரில், செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 30) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ள இந்த 44 பிரதிவாதிகளில், பிப்ரவரியில் நடந்த பொதுத் தேர்தலில் இரண்டாம் இடம்பிடித்த முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவரான நத்தாபோங் ருயெங்பன்யாவூட்டும் அடங்குவார்.
கட்சியின் முந்தைய வடிவம் ஒன்று, 2021ல் தாய்லாந்தின் அரச அவமதிப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான வரைவுச் சட்டத்தை முன்மொழிந்திருந்தது. அச்சட்டம், மன்னரையும் அவரது குடும்பத்தினரையும் விமர்சனங்களிலிருந்து பாதுகாப்பதுடன், ஒரு குற்றத்திற்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் வழிவகுக்கிறது.
தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (NACC), நெறிமுறைகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டி, 44 முன்னாள் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஓர் உரிமையியல் புகாரைத் தாக்கல் செய்தது.
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் அரசியல் பதவிகளை வகிக்கத் தடை விதிக்கப்படலாம். 10 ஆண்டுகளுக்கு அவர்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படலாம்.
ஜூன் 30ஆம் தேதியன்று, நாடாளுமன்றம் மற்றும் தேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைய அதிகாரிகள் உட்பட 17 சாட்சிகளின் பெயர்களை அரசுத் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அவர்களில் முதல் நபர் ஆகஸ்ட் 25ஆம் தேதி சாட்சியம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு விசாரணைகள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

