பேங்காக்: தாய்லாந்து அரசாங்கம் தனது வருவாயை மேலும் அதிகரிக்கச் சுற்றுப் பயணிகளிடம் கூடுதல் வரி வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் பயணத்துறை கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு இன்னும் முழுமையாகத் திரும்பாத சூழலில் புதிய வரித் திட்டம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் தலைமையிலான அரசாங்கம், நாட்டை விட்டு வெளியேறும் தாய்லாந்து மக்களிடமிருந்தும் வெளிநாட்டவரிடமிருந்தும் கிட்டத்தட்ட 1,000 பாட் (38 வெள்ளி) புறப்பாட்டு வரி வசூலிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறது.
மேலும், விமானம் மூலம் வரும் வெளிநாட்டுப் பயணிகளிடம் 450 பாட் (17 வெள்ளி) கட்டணம் வசூலிக்கவும் அது திட்டமிடுகிறது.
உள்நாட்டுத் தேவை குறைந்துள்ளதாலும் மந்தமான வளர்ச்சியாலும் தாய்லாந்துப் பொருளியல் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 முதல் 4 விழுக்காடு வரை வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, தாய்லாந்துக்குக் கூடுதல் வருவாய் தேவைப்படுகிறது.
இருப்பினும், இந்த வரி, பயணிகளின் எண்ணிக்கையைக் கடுமையாகக் குறைக்கும் என்று தாய்லாந்துப் பயண முகவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதனால், விமானச் சேவைகள் குறைக்கப்பட்டு, பயணத்துறை பாதிக்கப்படலாம் என்று அது கூறியது.
தாய்லாந்தை வட்டார விமானப் போக்குவரத்து மையமாக மாற்றும் அரசாங்கத்தின் இலக்கிற்கும் இது தடையாக அமையும்.
தாய்லாந்துக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 24 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் சென்றனர். இது, கடந்த ஆண்டைவிட 4 விழுக்காடு குறைவு. தாய்லாந்துப் பயணத்துறைக் கழகம் 2026ஆம் ஆண்டில் ஏறத்தாழ 33 மில்லியன் வருகையாளர்களை எதிர்பார்க்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட 500 பாட் புறப்பாட்டு வரியை அரசாங்கம் மீண்டும் கொண்டுவரவுள்ளது என்று நிதி அமைச்சின் நிரந்தரச் செயலாளர் லாவரோன் சாங்ஸ்னிட் கூறினார்.
இந்த வரியை விமானப் பயணச்சீட்டுகளுடன் சேர்த்து வசூலிக்க முடியும். வெளிநாடு செல்ல வசதி உள்ளவர்கள் கூடுதல் கட்டணத்தை ஏற்க முடியும் என்று அவர் வாதிட்டார்.
விமானம் மூலம் வரும் வெளிநாட்டவரிடம் 450 பாட் வசூலிக்கும் திட்டத்திற்கு அண்மைய இணையக் கருத்தாய்வில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று சுற்றுலா, விளையாட்டுத் துறை அமைச்சர் சுரசக் பஞ்சரோன்வோரகுல் தெரிவித்தார்.
