சீன வர்த்தகரைக் கைதுசெய்ய தாய்லாந்து முயற்சி

சீன வர்த்தகரைக் கைதுசெய்ய தாய்லாந்து முயற்சி

1 mins read
a284f992-9ddc-44bc-a9b9-16e01659aa97
சந்தேகப் பேர்வழி வாங் யிச்செங். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பேங்காக்: நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மின்னிலக்க நாணய மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் சீன வர்த்தகரைக் கைதுசெய்ய தாய்லாந்து ஆணை பிறப்பித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கொண்ட, நாடுகளுக்கிடையிலான மின்னிலக்க நாணய மோசடி தொடர்பான விசாரணையில் வாங் யிச்செங் எனும் அந்த வர்த்தகரின் பெயர் தொடர்புபடுத்தப்பட்டது. மோசடிச் செயல்கள், இணைய சூதாட்டம் ஆகியவற்றின் மூலம் ஈட்டப்பட்ட தொகையை சட்டவிரோதமாகத் தயார்செய்யப்பட்ட மின்னிலக்க நாணயங்களைக் கொண்டு கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட கும்பலுக்கும் அவருக்கும் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்த விசாரணை அறிக்கை 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மோசடிச் செயல்களுடன் தொடர்பிருந்த மின்பணப்பையிலிருந்து வாங் யிச்செங்குக்கு எப்படி மில்லியன்கணக்கில் பணம் புரண்டது என்பதை அந்த அறிக்கை விவரித்திருந்தது. வாங், தாய்லாந்தின் அரசியல் தலைவர்கள், அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் தொடர்புகளை வளர்த்துவந்த நிலையில் இந்த விவகாரம் தலைதூக்கியது.

கொள்ளையடித்ததாகவும் கணினிக் குற்றங்கள் சட்டத்தின்கீழும் வாங்மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக தாய்லாந்தின் சிறப்பு விசாரணைப் பிரிவின் பேச்சாளரான மேஜர் வோரனான் ஸ்ரீலாம் எனும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். சந்தேக நபர் நாட்டிலிருந்து வெளியேறியதாக நம்பப்படுகிறது என்றும் அவர் குறுந்தகவல் மூலம் ராய்ட்டர்சிடம் தெரியப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்