பேங்காக்: வேலை வாங்கப்படுவதிலிருந்து சிறாரைப் பாதுகாக்க தாய்லாந்து நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.
அமலாக்க நடவடிக்கைகளைக் கடுமையாக்குவது, திறன் மேம்பாடு போன்ற நடவடிக்கைகளின்மூலம் வேலை வாங்கப்படுவதிலிருந்து சிறாரைப் பாதுகாக்க தாய்லாந்து அரசாங்கம் உறுதியளித்துள்ளது. மாணவர்களுக்கு 10,000க்கும் மேலான பாதுகாப்பான விடுமுறை வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளாவியப் பிரச்சினை
138 மில்லியனுக்கும் அதிகமான சிறார் வேலை வாங்கப்படுவதாக உலகளாவியப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அபாயகரமான வேலைகளில் ஈடுபடும் 54 மில்லியனுக்கும் அதிகமான சிறாரும் அவர்களில் அடங்குவர். இந்நிலையில் தாய்லாந்து, பிள்ளைகள் வேலைக்கு எடுக்கப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி சிறார் வேலை வாங்கப்படுவதை எதிர்க்கும் உலக தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாள் பேசிய தாய்லாந்தின் பிரதமர் அலுவலகத் துணை அரசாங்கப் பேச்சாளரான கேப்டன் ஃபட்தரசாமி தொங்சாலுவாய்கோர்ன் முறையற்ற, பாதுகாப்பற்ற வேலைகளிலிருந்து சிறாரையும் இளையர்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் ஆக அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறினார்.
உகந்த நடவடிக்கைகள்
கல்வி, தொழில்துறை மேம்பாட்டு முயற்சிகள், வயதுக்கு உகந்த வேலைவாய்ப்புகள் ஆகியவை சம்பந்தப்பட்டோரை எளிதில் சென்றடைவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துவருவதாக அவர் சொன்னார். இளையர்கள் பாதுகாப்பான முறையில் அனுபவம் பெற்று நாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்க உருவெடுக்க வகைசெய்வது இலக்காகும்.
உலகில் 138 மில்லியனுக்கும் அதிகமான பிள்ளைகள் இன்னும் வேலை வாங்கப்படுவதாக தாய்லாந்து அரசாங்கம், அனைத்துலக ஊழியர் அமைப்பு, யுனிசெஃப் ஆகியவற்றின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்தது. அவர்களில் 54 மில்லியனுக்கும் அதிகமானோர், தங்களின் உடல் ஆரோக்கியம், வளர்ச்சி ஆகியவற்றுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வேலைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கை
சிறாரின் உரிமைகளைப் பாதுகாப்பது உலகளவில் காணப்படும் சவாலாக இருக்கிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுவதாக திருவாட்டி ஃபட்தரசாமி குறிப்பிட்டார். தாய்லாந்து ஊழியரணி அமைச்சர் ஜுலாப்புன் அமொர்க்விவாட், திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமது அமைச்சின்கீழ் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக சவாலான நிதிச் சூழல் காரணமாக இளம் வயதிலேயே வேலை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட பிள்ளைகள் போன்றோருக்கு இது பொருந்தும்.

