கடும் வெள்ளத்தால் குறைகூறப்படும் தாய்லாந்தின் ‘ஒன் மேப்’ கட்டமைப்பு

கடும் வெள்ளத்தால் குறைகூறப்படும் தாய்லாந்தின் ‘ஒன் மேப்’ கட்டமைப்பு

படம்: ஏஎஃப்பி

29 Sep 2026 - 4:11 pm

2 mins read

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கொட்டித் தீர்த்த மழை தணியத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், பல்வேறு வட்டாரங்களில் கடும் வெள்ளம் நீடிப்பதால் அரசாங்கத்தின் பேரிடர் எச்சரிக்கை, நீர் நிர்வாகக் கட்டமைப்புகள் குறித்த விமர்சனங்கள் மீண்டும் எழுந்துள்ளன.

பொதுமக்களுக்கான எச்சரிக்கையிலும் பாதிக்கப்பட்ட இடங்களுக்குக் கொடுக்கவேண்டிய உதவிகளிலும் ஏற்பட்ட தாமதத்தால் தாய்லாந்துப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அனுட்டின் சான்விராக்குலின் அரசாங்கத்தை மக்கள் குறைகூறினர்.

27 மாவட்டங்களில் உள்ள ஏறக்குறைய 1.7 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் அவதியுற்றனர்.
27 மாவட்டங்களில் உள்ள ஏறக்குறைய 1.7 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் அவதியுற்றனர். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்கில் 48 மணிநேரத்துக்குமேல் பெய்த கனத்த மழையால் கிட்டத்தட்ட 300 மில்லிமீட்டர் அளவிலான நீர் பெருகியது.

அதைத் தொடர்ந்து, 50 வட்டாரங்கள் பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

வானிலை குறித்து தற்போதிருக்கும் முன்னுரைப்புகள், தரவுகள், அவசரகாலத்தில் உதவக்கூடிய அதிகாரிகள், வளங்கள் ஆகியவை மழையால் ஏற்பட்ட சேதங்களைக் குறைக்கத் துரிதமாக ஒன்றுதிரட்டப்பட்டனவா என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.

இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து 26ஆம் தேதிவரை கடுமையான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் மிகப் பெரிய வெள்ளம் ஏற்படும் என்று அதிகாரபூர்வ மதிப்பீடுகள் காட்டவில்லை என்று தேசிய நீர்வளக் குழுவின் கூட்டங்களுக்குத் தலைமையேற்ற துணைப் பிரதமர் சோங்சாக் தொங்ஸ்ரீ தெரிவித்தார்.

எனவே, கடுமையான வெள்ளம், எதிர்பாராத வானிலை மாற்றத்தால் ஏற்பட்டதா அல்லது அமைப்புகள் அதுகுறித்த முன்னுரைப்புகளைச் சரிவர புரிந்துகொள்ளாமலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமலும் இருந்ததால் ஏற்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பேரிடர் குறித்த தகவல்களை அரசாங்க அமைப்புகளுக்கு இடையே பகிர்ந்துகொள்ள வழிவகுக்கும் ‘ஒன் மேப்’ என்ற தாய்லாந்தின் அண்மைய கட்டமைப்புமீதும் மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

வெவ்வேறு அமைப்புகளிலிருந்து பெறப்படும் தகவல்களைத் தேசிய நீர், பேரிடருக்கான ஒரே தளத்தில் ஒருங்கிணைப்பதற்கான உடன்பாட்டுக்கு மின்னிலக்கப் பொருளியல், சமூக அமைச்சு, உயர் கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, புத்தாக்க அமைச்சு ஆகியவை ஆதரவு தெரிவித்தன.

அதையடுத்து இம்மாதம் செப்டம்பரில் ‘ஒன் மேப்’ கட்டமைப்பைத் தாய்லாந்து அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்தது.

வெள்ளம் வடியத் தொடங்கினாலும் அரசாங்க நிர்வாகம் குறித்து மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
வெள்ளம் வடியத் தொடங்கினாலும் அரசாங்க நிர்வாகம் குறித்து மக்கள் வருத்தம் தெரிவித்தனர். - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்
தாய்லாந்துபேரிடர்வெள்ளம்விமர்சனம்எச்சரிக்கை