பேங்காக்: அரசு ஊழியர்கள் முன்கூட்டியே ஓய்வுபெறும் வகையில் விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்த தாய்லாந்து திட்டமிட்டு வருகிறது.
அரசாங்கத்தின் செலவைக் குறைக்கும் நோக்கில் கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஐந்து விழுக்காடு என்ற விகிதத்தில் அரசு ஊழியர்களை விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தாய்லாந்துத் துணைப் பிரதமர் பக்கோன் நீல்பிரபந்த் தெரிவித்துள்ளார்.
விருப்ப ஓய்வுத் திட்டம் 2027 நிதியாண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக, 50 வயதை எட்டிய ஊழியர்களை இலக்காகக் கொண்டு அத்திட்டம் செயல்படுத்தப்படும். அதேவேளையில், உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக 40 வயதை எட்டியோரும் அத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யத் தகுதிபெறுவர் என்று திரு நீல்பிரபந்த் விளக்கினார்.
விருப்ப ஓய்வுத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அரசுக்கு ஏழு பில்லியன் பாட் (S$267.5 மில்லியன்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஜூன் நிலவரப்படி, தாய்லாந்தில் 1.68 மில்லியன் பேர் அரசுப் பணிகளில் இருந்தனர்.
விருப்ப ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் மாதச் சம்பளத்தைப் போல் 12 மடங்குக்கும் அதிகமான தொகையை இழப்பீடாக வழங்க அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. எனினும், துல்லியமான இழப்பீட்டுத் தொகை குறித்து நிதி அமைச்சுடன் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல் தலைமையிலான தாய்லாந்து அரசாங்கம், நிதி மேலாண்மையைச் சீரமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
அவ்வகையில், நாட்டின் பொருளியலில் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ள திடீர் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும், அவசரகாலத்திற்குப் பயன்படும் வகையில் காப்பு நிதியை அதிகரிக்கவும் இந்த விருப்ப ஓய்வுத் திட்டம் பெரிதும் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.
விருப்ப ஓய்வுத் திட்டம் தொடர்பான விவரங்களைச் சம்பந்தப்பட்ட அமைப்புகள் இறுதிசெய்து வருகின்றன என்றும் அதன்பின் அது அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறச் சமர்ப்பிக்கப்படும் என்றும் துணைப் பிரதமர் கூறினார்.
