கோலாலம்பூர்: தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற பத்துமலையில் பொதுமக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்து சுமுகமாக இருப்பதையும் உறுதி செய்ய மொத்தம் 1,520 காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்படுவதாக மலேசியக் காவல்துறை தெரிவித்தது.
அவர்களில் 166 மூத்த அதிகாரிகளும் அடங்குவர் என்று சிலாங்கூர் மாநிலத்தின் காவல்துறைத் தலைவர் ஷசாலி கஹார் கூறினார்.
பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவல்துறையினர் சிலாங்கூர் மாநிலம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட சில சாலைகள் ஜனவரி 29ஆம் தேதி பின்னிரவு 12.01 மணியிலிருந்து பிப்ரவரி 2ஆம் தேதி நள்ளிரவு வரை மூடப்பட்டிருக்கும்.
“ஏழு பிரதான சாலைகள், நிலைமையைப் பொறுத்து படிப்படியாக மூடப்படும். பக்தர்கள் எவ்விதப் பிரச்சினையுமின்றி நடமாடவும் போக்குவரத்து சுமுகமாக இருக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்று பத்துமலையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு ஷசாலி கஹார் கூறினார்.
தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்களுடன் தொடர்பில்லாதோர் வேறு பயணப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு இது உதவும் என்றார் அவர்.
மேலும் பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் உள்ள வட்டாரத்தில் அனுமதி பெறாமல் ட்ரோன்களைப் பறக்கவிட முடியாது என்று திரு ஷசாலி கஹார் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
விதிமுறையை மீறுபவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

