கோலாலம்பூர்: தைப்பூசத் திருநாளுக்காக மலேசியாவின் கேடிஎம் ரயில் நிறுவனம் இலவச ரயில் சேவையை வழங்குவதோடு, தொடர்ந்து மூன்று நாள்களுக்கு 24 மணிநேரச் சேவையையும் வழங்கவிருக்கிறது.
இந்தத் தகவலை போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறினார்.
தைப்பூசத் திருநாள் பிப்ரவரி 1ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
ஜனவரி 30 தொடங்கி பிப்ரவரி 2 வரை பத்துமலைக்குச் செல்லும் வழிகளில் 24 மணிநேர ரயில் சேவை இருக்கும் என்றார் அவர். அவற்றில் 609 ரயில் பயணங்கள் இடம்பெறும் என்றும் இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 23 விழுக்காடு அதிகம் என்றும் கேஎல் சென்ட்ரலில் நிகழ்ந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு லோக் தெரிவித்தார்.
இலவச ரயில் சேவைகள் ஜனவரி 31ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீடிக்கும். அந்த வசதியை ஏறத்தாழ 450,000 பயணிகள் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
பத்துமலைக்குச் செல்லும் பக்தர்கள் குவாசா சென்ட்ரல், சுங்கை பூலோ, ஸ்ரீதாமான்சாரா தீமூர் ஆகிய ரயில் நிலையங்கள் வாயிலாக இலவசப் பயணங்களை எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.
இலவச ரயில் சேவைகளை வழங்குவதால் 1 மில்லியன் ரிங்கிட் கூடுதலாகச் செலவாகும் என்றபோதிலும் நெரிசலைக் குறைக்க அவ்வாறு செய்ய வேண்டியது அவசியம் என்றும் திரு லோக் குறிப்பிட்டார்.
“புதிய பயணிகளும் தொடர்ந்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தாதவர்களும் ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு எடுக்கத் திரளும்போது நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனை இலவசப் பயணம் சரிசெய்யும். நெரிசலைக் குறைக்கும்போது பயண நடைமுறையில் வேகம் இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“பத்துமலை, தாமான் வாஹ்யு. கம்போங் பத்து, பத்து கென்டோன்மென், செந்தூல் புத்ரா, பேங்க் நெகரா போன்றவை உள்ளிட்ட 28 ரயில் நிலையங்களில் ஜனவரி 30 முதல் 24 மணி நேரமும் இடைவிடாமல் ரயில்கள் இயங்கும்,” என்றார் அவர்.
“தைப்பூசத்தையொட்டி ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு முன்பு ஏராளமான பக்தர்கள் பத்துமலைக்கு பயணம் செய்யத் தொடங்குவார்ர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
“எனவே, இலவசப் பயணங்களை வழங்குகிறோம். பத்துமலைக்கு 216 பயணங்கள் கூடுதலாகச் சேர்க்கப்படும். இது வழக்கமான அன்றாடச் சேவைகளைவிட இருமடங்கு அதிகம்.
“கேஎல் சென்ட்ரலில் இருந்து ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும்,” என்று திரு லோக் விளக்கினார்.

