ஜார்ஜ்டவுன்: இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவின்போது பக்தர்கள் தேங்காய் உடைப்பதைக் குறைத்துக்கொள்ளுமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேங்காய் உடைக்கச் செலவிடும் தொகையை இந்தியச் சமூகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழிருப்பவர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றப் பயன்படுத்தலாம் என்று திரு சுப்பாராவ் கூறியிருக்கிறார்.
"பக்தர்களில் பலருக்கும், குறிப்பாக சீனச் சமூகத்தினருக்கு, தேங்காய் உடைப்பதன் பின்னணியிலுள்ள காரணங்கள் தெரிவதில்லை. அதிகமான தேங்காய்களை உடைத்தால் அதிக அதிர்ஷ்டம் கிட்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
"ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கில் உடைக்கப்படும் தேங்காய்கள் இறுதியில் குப்பைகளாகச் சென்று, எரிக்கப்படுகின்றன. அதனால் வெளிப்படும் புகையால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது," என்று ஓர் அறிக்கை வழியாக திரு சுப்பாராவ் தெரிவித்திருக்கிறார்.
தேங்காய் உடைப்பது என்பது இந்து சமயத்தினரின் உள்ளார்ந்த நம்பிக்கை என்று குறிப்பிட்ட அவர், மனமொன்றிய இறைப்பற்றுடன் ஒரு தேங்காய் உடைப்பது எனச் சரியான முறையில் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
விலைவாசி உயர்ந்துவரும் இப்போதைய சூழலில் ஆயிரக்கணக்கில் தேங்காய் வாங்கச் செலவிடுவதும் அறிவுப்பூர்வமானதாக இராது என்றும் அவர் சொன்னார்.
தைப்பூசத் திருவிழாவின்போது தேங்காய் உடைப்பது என்பது, தான் என்ற அகந்தையை இறைவனின் திருவடியில் விட்டுவிட்டு, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் செயலாகப் பார்க்கப்படுகிறது என்று திரு சுப்பாராவ் விளக்கினார்.
ஒரு தேங்காய் மட்டும் உடைக்குமாறு பக்தர்களையும் அதிக விலைக்கு விற்றால் தேங்காய் வாங்க வேண்டாமெனப் பயனீட்டாளர்களையும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
"பயனீட்டாளர்கள் அதிக விலை கொடுத்தால், விலையும் உயரும். விலையைக் குறைக்க பயனீட்டாளர்களும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும்," என்றார் அவர்.
இதனிடையே, தைப்பூசத்தின்போது தேங்காய் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சந்தையில் ஒரு தேங்காய் 1.70 முதல் 1.90 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிற நிலையில், தைப்பூசத்தின்போது அது 2.50 முதல் 3 ரிங்கிட்வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக திரு சுப்பாராவ் கூறினார்.