பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் அரசாங்கத்தில் அவர் பங்குவகிக்கக்கூடும் என்று தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் கூறியிருக்கிறார்.
அவர் தாய்லாந்து மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் மதிப்பு சேர்ப்பார் என்று தாம் நம்புவதாகத் திரு ஸ்ரெத்தா சொன்னார்.
நியூயார்க்கில் புளூம்பெர்க் தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் அவர் அந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
அவரது கருத்துகள் திரு தக்சின் தொடர்ந்து அந்நாட்டு அரசியலின் ஒரு பகுதியாக இருப்பதற்கான அறிகுறியாகத் திகழ்கின்றன.
2008ஆம் ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க 74 வயது தக்சின் தாய்லாந்திலிருந்து தப்பிச் சென்றார். 15 ஆண்டுகள் நாடு கடந்து வாழ்ந்த அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் தாய்லாந்து திரும்பினார்.
திரு ஸ்ரெத்தா தாய்லாந்தின் பிரதமராகப் பதவியேற்ற சில மணி நேரத்திற்கு முன்னர் திரு தக்சின் தாய்லாந்து சென்றடைந்தார்.
இதற்கிடையே, தாய்லாந்தில் மருத்துவக் காரணங்களுக்காக கஞ்சா பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தப்போவதாக திரு ஸ்ரெத்தா உறுதியளித்துள்ளார்.
தாய்லாந்து, மருத்துவக் காரணங்களுக்காக போதைப்பொருள் பயன்பாட்டை 2022ஆம் ஆண்டில் சட்டபூர்வச் செயலாக வகைப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் போதைப்பொருளை விற்கும் பல கடைகள் அமைக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
போதைப்பொருள் பயன்பாட்டை சட்டபூர்வச் செயலாக மாற்றிய முதல் ஆசிய நாடாக தாய்லாந்து விளங்குகிறது. அதையடுத்து நாட்டின் போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள், போதைப்பொருள் பல மருந்துக் கடைகளில் எளிதில் விற்கப்படுவது ஆகியவற்றைச் சரிசெய்யப்போவதாக திரு ஸ்ரெத்தா குறிப்பிட்டார். ஆறு மாதக் காலத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர் கூறினார்.
புளூம்பர்க் தொலைக்காட்சியுடன் நடைபெற்ற நேர்காணலில் திரு ஸ்ரெத்தா இவ்வாறு பேசினார்.
“இது சரிசெய்யப்படவேண்டும். மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் அது பயன்படுத்தப்படும் வகையில் விதிமுறைகளைச் செயல்படுத்தலாம்,” என்று திரு ஸ்ரெத்தா கூறினார்.

