மலேசிய அரசியலில் புதிய பெர்சாமா கட்சிக்கும் இடமுண்டு: ரஃபிசி ரம்லி

மலேசிய அரசியலில் புதிய பெர்சாமா கட்சிக்கும் இடமுண்டு: ரஃபிசி ரம்லி

2 mins read
கூட்டணிக் கட்சிகளால் மக்களுக்குக் சலிப்பு: முன்னாள் அமைச்சர் ரஃபிசி
d1ae945f-dc3f-4c3f-8f9b-5f6003959128
பெர்சாமா கட்சியின் இணைத் தலைவர்கள் ரஃபிசி ரம்லி (இடது), நிக் நஸ்மி நிக் அகமது. இருவரும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆவர். - படம்: பெர்னாமா

ஈப்போ: மலேசியாவின் தற்போதைய அரசியல் சூழலில் ‘பார்ட்டி பெர்சாமா மலேசியா’ (பெர்சாமா) என்ற புதிய கட்சிக்கு போதுமான அளவு ஆதரவு உள்ளதாக அதன் இரு தலைவர்களில் ஒருவரான ரஃபிசி ரம்லி கூறினார்.

வேறு எந்தக் கட்சியுடனும் அது கூட்டணி அமைத்துக்கொள்ளாததால் யாருக்கும் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டிய அவசியம் அதற்கு இல்லை எனவும் அவர் கருத்துரைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) ஈப்போ மாநிலத்தில் நடந்த மக்களுக்குக் கட்சியை அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு ரஃபிசி பேசினார்.

மலேசிய மக்களுக்குக் கூட்டணிகளினால் சலிப்பு ஏற்பட்டுவிட்டது என்ற அவர், ஜோகூர், நெகிரி செம்பிலான் ஆகிய இருமாநிலத் தேர்தலில் கட்சி போட்டியிடப்போகும் தொகுதிகள் குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.

கூட்டணியில் இல்லாதது சாதகமாக அமையும் என்று கூறியதோடு, பெர்சாமா எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப்போகிறது என்பதை மற்ற கட்சிகள் எளிதில் தெரிந்துகொள்ள முடியாது என்பதையும் அவர் விளக்கினார்.

தேர்தல் பிரசாரத்தில் மக்கள் கொடுக்கும் ஆதரவைப் பொறுத்து முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள் அமையும் எனவும் திரு ரஃபிசி சொன்னார்.

“பெர்சாமா கட்சி தொடங்கி மூன்று வாரங்கள்தான் ஆகியுள்ளன. எனவே ஆரம்பத்திலேயே ஒரு தேர்தலைச் சந்திக்கும் கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என நாம் எடுத்துக்கொள்ள முடியாது,” என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

சீனர்களும் மலாய்க்காரர்களும்

செய்தியாளர் சந்திப்புக்கு முன் மக்களிடம் அவர் ஆற்றிய உரையில் சீனர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் இடையே கல்வியை வைத்து பிளவு ஏற்படுத்தும் போக்கு பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் தொட்டே மலேசியாவில் பின்பற்றப்பட்டுவரும் அரசியல் நிலைப்பாடு என்று திரு ரஃபிசி கூறினார்.

அது முறையாகக் கையாளப்படவேண்டும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்மலேசியாஜோகூர்அரசியல்போட்டிதொகுதி