கோலாலம்பூர்: மொத்தம் 35 காசநோய் (டிபி) குழுமங்கள் இன்னும் தீவிரமாக இருப்பதாக மலேசியச் சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) தெரிவித்துள்ளார்.
இந்த 35 தீவிர காசநோய் குழுமங்கள் கடந்த ஆண்டு பதிவான 88 குழுமங்களில் (254 சம்பவங்கள்) ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.
“2026ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, பிப்ரவரி 7ஆம் தேதி வரை, 10 குழுமங்கள் பதிவாகியுள்ளன. மேலும் அனைத்தும் செயல்பாட்டில் உள்ளன,” என்று திரு ஸுல்கிஃப்லி நாடாளுமன்றத்தில் அமைச்சரின் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.
நாட்டின் காசநோய் சம்பவங்களும் காசநோய் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் அகமது யூனுஸ் ஹைரி கேட்டதற்கு அவர் பதிலளித்தார்.
மலேசியாவின் நிலைமையை விளக்கிய அமைச்சர், 2025ஆம் ஆண்டில் சிலாங்கூரில் காசநோய் தொற்று பரவல் அதிகமாக இருந்தது என்றும், அதைத் தொடர்ந்து கிளந்தான், கெடா, சரவாக் ஆகிய இடங்களில் காசநோய் தொற்று அதிகமாக இருந்தது என்றும் கூறினார்.
2025ஆம் ஆண்டில், 88 காசநோய் தொற்று பரவல் தீவிரமாக இருப்பதாக அவர் கூறினார். இதில் சிலாங்கூர் (13 குழுமங்கள், 37 சம்பவங்கள்), கெடா (ஆறு குழுமங்கள், 13 சம்பவங்கள்), சரவாக் (ஐந்து குழுமங்கள், 27 சம்பவங்கள்), கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா (ஐந்து குழுமங்கள், 14 சம்பவங்கள்), ஜோகூர் (மூன்று குழுமங்கள், ஏழு சம்பவங்கள்), கிளந்தான் (இரண்டு குழுமங்கள், ஐந்து சம்பவங்கள்), திரெங்கானு (ஒரு குழுமம், இரண்டு சம்பவங்கள்) ஆகியவை அடங்கும்.
இவ்வாண்டு, சிலாங்கூரில் உள்ள நான்கு குழுமங்களில் 10 சம்பவங்களும், ஜோகூரில் தலா ஒரு குழுமத்தில் 37 சம்பவங்களும், கெடாவில் இரண்டு சம்பவங்களும், கிளந்தானில் இரண்டு சம்பவங்களும், பாகாங்கில் நான்கு சம்பவங்களும், பெர்லிசில் (இரண்டு சம்பவங்களும்), சாபாவில் ஐந்து சம்பவங்களும் அடங்கும்.
தடுப்பு நடவடிக்கைகளை விளக்கிய அமைச்சர், “உறைவிடப் பள்ளிகள், சிறைச்சாலைகள், ஊழியர் தங்குவிடுதிகள் போன்ற அதிக ஆபத்துள்ள இடங்களில் பரிசோதனைகள் காசநோய் தகவல் அமைப்பு கையேட்டின் (TBIS 2018) அடிப்படையில் நடத்தப்படுகின்றன,” என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், மறைந்திருந்து தாக்கும் காசநோய் பற்றியும் அமைச்சர் எச்சரித்தார்.
“இதன்மூலம் கண்டறிதல் கடினமாக இருக்கும். பெரும்பாலும் தொற்று கண்டறிதலின் விளைவு கவனிக்கப்படாமல் போகும்.
“ஆனால் நாங்கள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கிருமி மேலும் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகளை நாங்கள் தொடர்வோம்,” என்றார் அவர்.

