இந்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசிய உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதில் எவ்வித நிபந்தனையும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வைக்கவில்லை. இதனை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்சுடன் அக்டோபர் 8ஆம் தேதி நடந்த ஒரு நேர்காணலில் மலேசிய முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் சஃப்ருல் அப்துல் அசிஸ் கூறினார்.
“எங்களது புரிந்துணர்வின்படி எந்த நிபந்தனைகளும் அறவே இல்லை” எனவும் அவர் வலியுறுத்தினார்.
தாய்லாந்து கம்போடியா அமைதி ஒப்பந்தம் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் சடங்குப்பூர்வமாக கையெழுத்திடப்படும் என்ற நிபந்தனையை அதிபர் டிரம்ப் முன்வைப்பார் என்று அமெரிக்காவில் இயங்கும் அரசியல் செய்தித்தளம் “பொலிடிக்கோ” செய்தி வெளியிட்டிருந்தது. அது மலேசியப் பிரதமரை சிரமத்துக்கு உள்ளாக்கியிருக்கும்.
அதைப்பற்றி மலேசிய அரசாங்கத்துக்குத் தெரியாது எனவும் அமைச்சர் சஃப்ருல் கூறினார். அவருக்கும் அமெரிக்க வர்த்தக பிரநிதிகளுக்கும் நடந்த காணொளி சந்திப்பில் அதைப் பற்றிய பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என்று உறுதிப்படுத்தினார்.
அமெரிக்கா விதித்துவரும் வர்த்தக வரிகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில் ஆசியான் உச்சநிலை மாநாடு மலேசியாவில் நடைபெறவுள்ளது. மலேசிய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 19 விழுக்காடு வரி விதித்துள்ளது.