‘ஊழல்வாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தைக் காட்ட போதுமான இடமில்லை’

‘ஊழல்வாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தைக் காட்ட போதுமான இடமில்லை’

1 mins read
d6421402-3cfe-4d17-8c4a-fcf40921ea3d
ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவோரிடமிருந்து S$567 மில்லியன் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் ஆட்சியின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவோரிடமிருந்து 6.7 டிரில்லியன் ரூப்பியா (S$567 மில்லியன்) மதிப்பில் ரொக்கப் பணத்தைச் சட்ட அமலாக்க அமைப்புகள் பறிமுதல் செய்ததாக அரசியல், பாதுகாப்புத்துறை ஒருங்கிணைப்பு அமைச்சர் புடி குனாவான் தெரிவித்துள்ளார்.

தலைமைச் சட்ட அதிகாரி எஸ்டி புர்ஹானுதீனுடன் சேர்ந்து வியாழக்கிழமை (ஜனவரி 2) நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு புடி, ஆதாரங்களைக் காட்சிப்படுத்த அரசாங்க வழக்கறிஞர்களுக்குப் போதுமான இடம் இல்லை என்று சொன்னார். மாறாக, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பெட்டகத்தில் ரொக்கம் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“ஆரம்பத்தில் இந்த அறையில்தான் ரொக்கத்தை வைக்க நாங்கள் திட்டமிட்டோம். ஆனால், அளவீடு செய்த பிறகு, இடம் போதாது என்பது தெரிந்தது. ஆனால், அது அவ்வளவு அதிகமான தொகை என்று நான் சொல்வேன்,” என்றார் அவர்.

ஊழல்வாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம், சொத்துகள் அனைத்தையும் காட்சிக்கு வைக்க பேரளவில் ஆயத்தப் பணிகள் தேவைப்படும் என்று திரு புடி சொன்னார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்தோனீசிய ரக்யாட் வங்கிக்குச் சொந்தமான பெட்டகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“பணத்தை எண்ணுவதற்கே எங்களுக்கு ஒரு நாள் தேவைப்பட்டது. அதை நாங்கள் ஒப்படைக்க வேண்டுமெனில், நாங்கள் மீண்டும் எண்ண வேண்டும்,” என்றார் திரு புடி.

குறிப்புச் சொற்கள்