கோலாலம்பூர்: மலேசியாவின் உணவு விநியோகம் தொடர்ந்து நிலையாக இருப்பதாக அந்நாட்டு வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்குப் பூசலுக்கு மத்தியில் மே, ஜூன் வரை உணவு விநியோகம் நீடிக்கும் என்றார் அவர்.
நாட்டின் உணவுப் பொருள்கள் பெரும்பாலும் மேற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்டவற்றிலிருந்து இறக்குமதியாவதாகத் திரு சாபு சொன்னார்.
ஆசியான் நாடுகள், பிரேசில் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்தும் உணவுப் பொருள்கள் இறக்குமதியாவதை அவர் சுட்டினார்.
“இப்போதைக்குப் பொதுமக்கள் அஞ்சத் தேவையில்லை. அரிசி, கோழி, முட்டைகள், மீன், மாட்டிறைச்சி, பால், காய்கறிகள், பழங்கள் ஆகியவை மே, ஜூன் வரை போதுமான அளவு இருப்பில் உள்ளன,” என்றார் திரு சாபு.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரிசியின் கையிருப்பை ஒன்பது மாதங்களுக்குப் போதிய அளவில் வைத்திருக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் திரு சாபு கூறினார்.
அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வழங்கப்படும் 10லிருந்து 30 விழுக்காடு வரையிலான மானியத்தைத் தொடரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

