வாஷிங்டன்: மத்திய கிழக்கில் பெரும் போர் இருக்காது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை அன்று (செப்டம்பர் 4) மத்திய கிழக்குப் போரைத் தவிர்க்க முடியும் என்பதில் எந்த அளவுக்கு உங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது பேசிய திரு பைடன், பெரும் போர் மூளாது எனத் தாம் நம்புவதாகக் கூறினார்.
“என்னால் போரைத் தவிர்க்க முடியும். ஆனால் அதற்கு அதிகம், இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது,” என்றார் அவர்.
இஸ்ரேல், லெபனான் பிரச்சினையில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இதர நட்பு நாடுகளும் உடனடியாக 21 நாள் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், ஈரானுக்கு பதிலடி தருவதில் இஸ்ரேலுடன் அதற்குரிய வாய்ப்புகள் குறித்து விவாதித்து வருவதாக பைடன் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, திரு பைடனின் கருத்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பதற்றத்தால் விநியோகிப்பில் இடையூறு ஏற்படும் என்று வர்த்தகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஈரானின் எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலை கேட்டுக்கொள்வீர்களா என்று கேட்டதற்கு, அது பற்றி பொதுவெளியில் பேச விருப்பமில்லை என்றார் அதிபர் பைடன்.


