டாக்கா: பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தும் மூத்த பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமை ஆலோசகர் பதவியிலிருந்து விலகுவது பற்றி யோசித்து வருவதாக பிபிசி பங்ளா ஊடகம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதற்கான வழிகளைக் கண்டறியாததால் திரு யூனுஸ் தொடர்ந்து பணியாற்ற சிரமப்படுவதாக மாணவர்களை வழிநடத்தும் தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர் நிட் இஸ்லாம் சொன்னார்.
“காலையிலிருந்து திரு யூனுஸின் பதவி விலகல் குறித்த செய்தியைக் கேட்டு வருகிறோம். அதுபற்றி அவருடன் பேசச் சென்றேன். பதவி விலகுவது பற்றி யோசிப்பதாகச் சொன்னார். தம்மால் பணியாற்ற முடியாதபடி பாதகமான சூழல் நிலவுவதாக அவர் கூறினார்,” என்று திரு இஸ்லாம் பகிர்ந்துகொண்டார்.
அரசியல் கட்சிகள் ஒன்றிணையாதவரை தம்மால் சரிவர செயல்பட முடியாது என்று திரு யூனுஸ் கவலையுற்றதாகவும் திரு இஸ்லாம் குறிப்பிட்டார்.
இருப்பினும், நாட்டின் பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றுடன் கூட்டத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ய தொடர்ந்து மனந்தளராமல் தைரியமாக இருக்கும்படி திரு யூனுஸிடம் சொன்னதையும் திரு இஸ்லாம் சுட்டினார்.
அரசியல் கட்சிகள் தம்முடன் ஒற்றுமையாக இணையும் என்று எதிர்பார்ப்பதாகவும் திரு யூனுஸிடம் சொன்ன திரு இஸ்லாம், “அனைவரும் திரு யூனுஸுடனும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.
எனினும், தம்முடைய வேலையைச் சரிவர செய்ய முடியாவிட்டால் திரு யூனுஸ் பதவியில் நீடிப்பதால் பயன் இல்லை என்ற திரு இஸ்லாம், “அரசியல் கட்சி அவர் இப்போதே பதவி விலகவேண்டும் என்று விரும்பினால் நம்பிக்கையும் உறுதியும் கிடைக்காத இடத்தில் அவர் ஏன் இருக்க வேண்டும்,” என்று கூறினார்.
பங்ளாதேஷின் ஒருங்கிணைந்த ராணுவப் படைகள் உள்ளிட்ட பல முக்கிய சவால்களைத் திரு யூனுஸின் அரசாங்கம் கடந்த இரண்டு நாள்களில் சமாளிக்கவேண்டிய சூழல் நிலவியது.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சியைக் கவிழ்த்த ஆர்ப்பாட்டக்காரர்களை ராணுவம் ஒடுக்கவில்லை. மாறாக, திருவாட்டி ஹசினா பாதுகாப்பாக இந்தியாவுக்குச் செல்ல அது உதவியது.