மலேசியா: தண்ணீர்க் குழாய் விரிசல், கசிவுகளால் அதிகச் செலவு

2 mins read
c003cf67-22a8-44d0-9da9-d43012c0ef16
மலேசியாவில் ஏறக்குறைய 39,000 கி.மீ தண்ணீர்க் குழாய்கள் மாற்றப்பட வேண்டும். அதற்கு குத்துமதிப்பாக மலேசிய ரிங்கிட் 58.5 பில்லியன் (S$18.5 பில்லியன்) செலவாகும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் 140,000 கிலோ மீட்டர் நீளமுள்ள தண்ணீர்க் குழாய்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குக் குழாய்கள் மிகவும் பழையதாகிவிட்டன. அவற்றில் ஏற்பட்டுள்ள விரிசல்களும் கசிவுகளும் செயல்பாட்டுச் செலவுகளை அதிகரித்துள்ளன.

ஏறக்குறைய 39,000 கி.மீ. குழாய்கள் மாற்றப்பட வேண்டும். அதற்குக் குத்துமதிப்பாக 58.5 பில்லியன் ரிங்கிட் (S$18.5 பில்லியன்) தேவை என்று தேசிய நீர்ச் சேவைகளை நிர்வகிக்கும் அரசு அமைப்பான பெங்குருசான் அசெட் ஆயேர் பெர்ஹாட்டின் (பிஏஏபி) தலைவர் ஜசெனி மைடின்சா கூறினார்.

“வருவாய் ஈட்டாத நீர்ச் சேவையின் இழப்புகளைத் தடுக்க பழைய குழாய்களை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். தொடர்ந்து தண்ணீரை இழக்கும் நிலையில் புதிய சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டுவதில் அர்த்தமில்லை,” எனப் புதன்கிழமை (ஜனவரி 21) ஊடகவியலாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அனைத்து மாநிலங்களிலும் தேசியக் குடிநீர்த் திட்டத்தின் இழப்புகளை எதிர்கொள்ள, மலேசியக் கூட்டரசு மோசமாகப் பழுதடைந்துள்ள பழைய குழாய்களை மாற்றுவதற்கு நிதி வழங்க உள்ளது என்று குறிப்பிட்ட திரு ஜசெனி, பழுதுபார்ப்புப் பணிகளுக்கும் குழாய்களை மாற்றுவதற்குமான நிதியுதவி 2026ஆம் ஆண்டில் தொடங்கும் என்றார்.

“அந்தக் குழாய்கள் 30 ஆண்டுகளே ஆயுட்காலம் கொண்டவை. ஆனால் அவை 50 ஆண்டுகளைக் கடந்தும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, அவை மாற்றப்பட வேண்டும். அதற்கு வலுவான நிதித் திட்டம் வேண்டும். 2050க்குள் அப்பணியைச் செய்து முடிக்க வேண்டும்,” என்றார் அவர்.

தேசிய நீர் விநியோகத்தைப் பாதுகாக்க, நாட்டின் நீர்ச் சொத்துகள் தொடர்பில் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் தொடர்ச்சியான தணிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

ஆற்று நீர்ச் சுத்திகரிப்பு மிகவும் கட்டுப்படியானது. அதற்கு பாரம்பரியமான சுத்திகரிப்பு முறைகளே போதும். அவ்வளங்களைப் பாதுகாப்பதும் எளிதானது. நீர் வளங்களை அரசிதழில் வெளியிட்டு, அவை வீணாகாமல் பராமரிக்கும் பொறுப்பை உள்ளூர் அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

மலேசியாவின் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், ஆண்டுதோறும் தண்ணீர்த் தேவை 2 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை உயரும் என்றும், பொருளியல் நடவடிக்கைகளையும் கணக்கில்கொள்ளும்போது தேவை 5 விழுக்காடு முதல் 7 விழுக்காடு வரை உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

நீடித்தநிலைத்தன்மைக்கும் செலவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் நீர் வளங்களைப் பாதுகாப்பது முக்கியம். இருக்கும் வளத்தை முறையாகப் பாதுகாக்காவிட்டால் மாற்று வளங்களைத் தேட வேண்டும். அவற்றுக்கு அதிக சிக்கலான, செலவு மிக்க சுத்திகரிப்பு முறைகள் தேவைப்படும்.

முறையான பாதுகாப்பை உறுதிசெய்ய, நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு வேலி அமைத்து, பகல்-இரவுக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்று திரு ஜசெனி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்