மலேசியாவில் நிலவும் ஆபத்தான போக்கு: மலிவுவிலை மதுபானத்துக்கான தேவை அதிகரிப்பு

மலேசியாவில் நிலவும் ஆபத்தான போக்கு: மலிவுவிலை மதுபானத்துக்கான தேவை அதிகரிப்பு

2 mins read
f9f97230-ae47-4040-83f3-8357225a0299
விலைவாசி உயர்ந்துவரும் வேளையில், மதுப் பிரியர்கள் பலரும் மலேசியாவில் மலிவான, சட்டவிரோத மதுபானத்தை நாடுகின்றனர். படம்: தி ஸ்டார் -

விலைவாசி உயர்ந்துவரும் வேளையில், மதுப் பிரியர்கள் பலரும் மலேசியாவில் மலிவான, சட்டவிரோத மதுபானத்தை நாடுகின்றனர்.

அந்நாட்டில் உட்கொள்ளப்படும் மூன்றில் ஒரு பங்கு மதுபானங்கள் சட்டவிரோதமானவை. பொருளியல், மதுபானம் அருந்துவோர், மதுபான உற்பத்தியாளர்களுக்கு இது மிரட்டலாக அமைவதாக மலேசிய மதுபான ஆலைகள் சங்க இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சட்டவிரோதமாக ஏறக்குறைய 100 மில்லியன் லிட்டர் மதுபானம் விற்கப்படுவதாக அது கூறுகிறது. இதனால் அரசாங்கத்திற்கு 1.5 பில்லியன் ரிங்கிட் (S$459 மில்லியன்) வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

375 மி.லி. மலிவான, கலப்படமுடைய மதுபானம் 10 ரிங்கிட்டுக்கும் குறைவாக விற்கப்படுவதாக மலேசிய மலிவு விலை மதுபானத்துக்கு எதிரான இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.

அப்புட்டியில் 40 விழுக்காடு மது (ஆல்கஹால்) உள்ளது. அதில் தண்ணீர், 'கேரமல்', சர்க்கரை, சுவையூட்டி ஆகியவை சேர்க்கப்படுகின்றன. வழக்கமான மதுப்புட்டியில் 5 விழுக்காட்டிற்கும் குறைவாக மதுபானம் உள்ளது. அதன் விலை ஏறத்தாழ 18 ரிங்கிட்.

"கொவிட்-19 பெருந்தொற்று, பொருளியல் மந்தநிலை காரணமாக மனவுளைச்சலில் இருந்து நிவாரணம் பெற கூடுதலானோர் மதுபானம் உட்கொண்டனர்.

"நாணயப் பரிவர்த்தனை காரணமாக, மதுபானத்தை இறக்குமதி செய்வதற்கு அதிகம் செலவாகும். எனவேதான், மலிவான மதுபானங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது," என்று திரு மார்ஷல் விளக்கினார்.

"மதுபானம் அருந்துவோர், குறிப்பாக குறைந்த வருவாய் பிரிவில் உள்ளோர், செறிவு அதிகமுடைய மதுபானங்கள் உடலுக்கு ஏற்படுத்தும் தீங்கு குறித்து தெரிந்து வைத்திருப்பதில்லை. அவர்கள் குடிபோதையில் இருப்பது மட்டுமன்றி மதுபான நச்சுத்தன்மையாலும் அவதியுறுகின்றனர்," என்றார் அவர்.

மலிவு விலை மதுபானங்களின் விற்பனை தொடர்பிலான விதிகளை மறுஆய்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் திரு மார்ஷல் வலியுறுத்தினார்.

தமது இயக்கம் மதுபான விற்பனைக்கு எதிராக செயல்படவில்லை என்று சொன்ன அவர், "மலிவு விலை மதுபான விநியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றே நாங்கள் கூறுகிறோம். அவை உடல்நலத்துக்கு ஏற்படுத்தும் தீங்கே இதற்குக் காரணம்," என்று வலியுறுத்தினார்.

மதுபானம் விற்க மலேசியாவில் ஏறத்தாழ 5,700 கடைகள் உரிமம் பெற்றுள்ளன. அவற்றில் 30 உள்ளூர் நிறுவனங்கள் மலிவு விலையில் மதுபானம் தயாரிக்கின்றன.