டாக்கா: பங்ளாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசாங்கத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கும்பல்களைக் குறிவைத்து இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட கடும் நடவடிக்கைக்குப் பிறகு, 8,600க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளதாக பங்ளாதேஷ் அரசு பிப்ரவரி 24ஆம் தேதி தெரிவித்துள்ளது.
தலைநகரில் அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் குறித்து கவலை அதிகரித்து வரும் நிலையில், 2024 ஜனவரி முதல் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிட்டதாக காவல்துறை கூறுவதால், இந்தக் கைதுகள் நடந்துள்ளன.
ஆகஸ்ட் 2024 மாணவர் தலைமையிலான புரட்சியில் திருமதி ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பொறுப்பேற்ற இடைக்கால அரசாங்கத்தில் உள்துறை அமைச்சின் தலைவரான ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி, ‘ஆபரேஷன் டெவில் ஹன்ட்’ எனும் கைது நடவடிக்கையைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த கைது நடவடிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.
குற்றச்செயல்களுக்கு திருமதி ஹசீனாவின் அவாமி லீக் கட்சி உறுப்பினர்களே காரணம் என்று திரு சவுத்ரி குற்றம் சாட்டினார். அவர்கள் நாட்டின் நிலைத்தன்மையைச் சீர்குலாக்க விரும்புவதாகக் குற்றம் சாட்டினார்.
“ஆபரேஷன் டெவில் ஹன்ட் தொடரும். குற்றவாளிகளைத் தூங்கவோ அல்லது ஓய்வெடுக்கவோ விடமாட்டோம்,” என்று பாதுகாப்பு குறித்த அவசரகால மாநாட்டிற்குப் பிறகு பிப்ரவரி 24 அன்று அதிகாலை திரு சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த வன்முறை சம்பவங்களால் கோபமடைந்த மாணவர்கள் பலர் திரு சவுத்ரி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
“இந்த கைது நடவடிக்கை எதை சாதிக்க விரும்புகிறது,” என்று பட்டக்கல்வி மாணவரான சாடியா அஃப்ரீன் மோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது. பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் தாக்குதல்களும், கொள்ளையடிப்பும் வாழ்க்கையைத் தாங்க முடியாததாக ஆக்கியுள்ளன,” என்று திருவாட்டி சுமையா நஸ்ரீன் கவலை தெரிவித்தார் என்று ஏஎஃப்பி தளம் செய்தி வெளியிட்டது.

