பட்டுவாகலி: பங்ளாதேஷில் அதிதீவிர புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்லாயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை (மே 26) தங்கள் கரையோரக் கிராமங்களில் இருந்து வெளியேறி கான்கிரீட் வசதியுடைய பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றனர்.
பங்ளாதேஷையும் அண்டை நாடான இந்தியாவின் சில பகுதிகளையும் ‘ரிமால்’ புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலில் அலை எழுவதுடன் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் புயல்காற்று வீசும் என பங்ளாதேஷின் வானிலைத் துறை முன்னுரைத்தது.
“வழக்கமான அலையைவிட 12 அடி (4 மீ.) உயரம் வரை அலைப்பெருக்கை இந்தப் புயல் ஏற்படுத்தக்கூடும். இது ஆபத்தானதாக இருக்கலாம்,” என்று மூத்த வானிலைத் துறை அதிகாரி முகம்மது அபுல் கலாம் மாலிக் தெரிவித்தார்.
எச்சரிக்கை நிலையை உச்சத்திற்கு உயர்த்தியுள்ள அதிகாரிகள், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதுடன் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளனர்.
“பாதுகாப்பற்ற பகுதிகளில் இருந்து நூறாயிரக்கணக்கானோரை வெளியேற்றி கான்கிரீட் வசதியுடைய இடங்களுக்கு அவர்களை இடமாற்றம் செய்வதே எங்களது திட்டம்,” என்று அரசாங்கத்தின் பேரிடர் மேலாண்மைச் செயலாளர் கம்ரூல் ஹசன் தெரிவித்தார்.
வங்காள விரிகுடாவில் உள்ள பங்ளாதேஷின் கரையோரப் பகுதிகளில் ஏறக்குறைய 4,000 தற்காலிக தங்குமிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

