காத்மாண்டு: நேப்பாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவை வரவேற்க தலைநகர் காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) திரண்டனர்.
நேப்பாளத்தில் அண்மைக் காலமாக மன்னராட்சிக்கு ஆதரவாக பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நோப்பாளம், இந்துக்களை அதிகமாக கொண்டுள்ள நாடு.
2008ஆம் ஆண்டில் அங்கு மன்னராட்சி நீக்கப்பட்டது.
அதையடுத்து, மதச்சார்பற்ற நாடாக அது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேப்பாளத்தில் அரசியல் நிலையின்மை, ஊழல், பொருளியல் மந்தநிலை ஆகியவை தலைவிரித்தாடுகிறது.
இதனால், நோப்பாளத்தில் மீண்டும் மன்னராட்சி செழித்தோங்க வேண்டும் என்றும் இந்து நாடாக அது மீண்டும் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் குரல்கள் வலுக்கின்றன.
திரு ஷா, காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது அவரை வரவேற்கும் விதமாக ஆயிரக்கணக்கானோர் நேப்பாளக் கொடியை அசைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“வாருங்கள் மன்னரே, நாட்டைக் காப்பாற்றுங்கள்,” என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
நேப்பாள அரசியல் குறித்தும் மன்னராட்சியை மீண்டும் கொண்டு வருவது குறித்தும் 77 வயது திரு ஷா கருத்துரைப்பதைத் தவிர்த்து வருகிறார்.
ஆனால் அண்மைக் காலமாக அவர் பொதுமக்களை நேரில் சென்று பார்க்கிறார்.
“நேப்பாளத்தைக் காப்பாற்றவும் தேசிய ஒற்றுமையை நிலைநாட்டவும் விரும்பினால், நாட்டின் செழுமைக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபட நோப்பாளத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்,” என்று தேசிய ஜனநாயகத் தினத்தை முன்னிட்டு திரு ஷா கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
2001ஆம் ஆண்டில் நேப்பாளத்தில் நிகழ்ந்த படுகொலைச் சம்பவத்தில் அரச குடும்பத்தினர் மாண்டனர்.
அதையடுத்து, மாண்ட மன்னரான பிரேந்திரா பீர் விக்ரம் ஷாவின் இளைய சகோதரரான திரு ஞானேந்திரா ஷா மன்னராக முடிசூடப்பட்டார்.
அக்காலகட்டத்தில் நேப்பாளத்தின் பல இடங்களில் மாவோயிஸ்டுகள் கிளச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
2005ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தை திரு ஷா தற்காலிகமாக ரத்து செய்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
அதையடுத்து, நேப்பாளத்தின் அரசியல் கட்சிகளுடன் இணைந்து மாவோயிஸ்டுகள் நேப்பாளமெங்கும் பேரளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

