துபாய்: ஈரானில் நடந்துவரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 2,600 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் செயல்படும் மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி அமைப்பு (HRANA) புதன்கிழமை (ஜனவரி 14) தெரிவித்துள்ளது.
அண்மைய ஆண்டுகளில் காணப்படாத அளவில் ஈரானிய மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர். அனைத்துலகப் பொருளாதாரத் தடைகளால் அந்நாட்டில் விளைந்த பிரச்சினைகளுடன், அதன் அணுசக்தி நிலையங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாக்குதல் நடத்தியதும் அங்கு தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவில் நடந்துவரும் போருடன், ஈரானிய ஆர்ப்பாட்டங்கள் தற்போது மத்திய கிழக்கில் அமைதியைப் பெரிதும் பாதித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆர்ப்பாட்டங்களைத் தொடரும்படி ஈரானிய மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். ஈரானியர்களுக்கு ‘உதவி விரைவில் வரும்’ எனவும் அவர் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) கூறியிருந்தார். எவ்வகையான உதவி என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் “நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்” என்று பதிலளித்தார். அது ராணுவ நடவடிக்கையாக இருக்கலாம் என்பது அரசியல் பார்வையாளர்கள் பலரின் கருத்து.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் வன்முறையைத் தூண்டிவிடுகின்றன என்று ஈரானிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வெளிநாடுகளின் ஆதரவோடு தீவிரவாதிகள் ஆர்ப்பாட்டங்களில ஊடுருவி, கொலைகளைச் செய்துள்ளனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி அமைப்பு, 2,403 ஆர்ப்பாட்டக்காரர்கள், 147 அரசாங்கம் சார்ந்த நபர்கள், பதினெட்டு வயதுக்குட்பட்ட 12 பதின்மவயதினர் ஆகியோர் மரணமடைந்துள்ளனர் என்று கணக்கிட்டுள்ளது.
இரண்டு வாரங்களாக நாடு முழுவதும் தொடரும் ஆர்ப்பாட்டங்களில் 2,000 பேர் கொல்லப்பட்டனர் என்று செவ்வாய்க்கிழமை முதன்முறையாக ஓர் ஈரானிய அதிகாரி தகவல் வெளியிட்டார்.

