இங்கிலாந்தில் மே, ஜூன் மாதங்களில் நிலவிய கடுமையான வெப்பத்தில் 2,700க்கும் மேற்பட்டோர் மாண்டிருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
மிதமிஞ்சிய வெப்பத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளின் அடிப்படையில் அந்த எண்ணிக்கை எட்டப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். லண்டன் இம்பீரியல் கல்லூரி, வானிலை ஆய்வு மையம், லண்டன் சுகாதார-வெப்பமண்டல மருத்துவப் பள்ளி முதலியவற்றைச் சேர்ந்த வல்லுநர் குழு வெப்பநிலையை மதிப்பிட்டது.
ஜூன் மாதத்தின் கடுமையான வெப்பத்தில் அதிகமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் கூறினர். சென்ற ஜூன் மாதமே இங்கிலாந்தில் பதிவான ஆக வெப்பமான மாதம். போன மாதத்தில் நோர்ஃபோக் மாவட்டத்தின் லிங்வுட் கிராமத்தில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியசைத் தொட்டது. அது இதற்கு முன்னர், 1957ஆம் ஆண்டில் பதிவான ஆக அதிக வெப்பநிலையான 35.6 டிகிரி செல்சியசைவிட அதிகம்.
கடந்த மாதம் இங்கிலாந்தின் சில பகுதிகளிலும் வேல்சிலும் ஆக உயரிய வெப்பத்தைக் குறிக்கும் சிவப்பு எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டது. ஆரோக்கியமாக இருப்போரின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது.
மே மாத வெப்பமும் இவ்வாண்டு உச்சம் தொட்டது. ஏற்கெனவே 1922லும் 1944லும் மே மாதத்தில் பதிவான உச்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியசாகப் பதிவாகியிருந்தது. இவ்வாண்டு மே மாதம், வெப்பநிலை அதனையும் விஞ்சி 35.1 டிகிரி செல்சியசை எட்டியது.
மே, ஜூன் மாதங்களில் ஏற்பட்ட மிதமிஞ்சிய வெப்பத்திற்கு ‘வெப்பக் குவிமாடமே’ (Heat dome) காரணம் என்று கூறப்படுகிறது. இரு வெப்ப அலைகளும், அப்பகுதியில் வெப்பக் காற்றைச் சிக்க வைத்த ஒரு தேங்கிய உயர் அழுத்தப் பகுதியான ‘வெப்பக் குவிமாடத்தால்’ ஏற்பட்டன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மனிதர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தின் காரணமாக அது மேலும் மோசமடைந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் பூமி வெப்பமடைந்ததாக அவர்கள் நம்புகின்றனர். மே, ஜூன் மாதங்களில் பதிவான வெப்பநிலையை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை பருவநிலை மாற்றம் கூட்டியதாகவும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இரவு நேரங்களிலும் வெப்பம் கொளுத்துவதால் அது புழுக்கத்தை மேலும் அதிகப்படுத்துவதாகவும் கூறப்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள பல வீடுகள் வெப்பநிலையைத் தாங்கும் வகையில் கட்டப்படவில்லை. அதனால், மக்கள் அதிக வெப்பத்தால் நீண்டகாலம் பாதிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது.


