சோல்: 2024ல் வடகொரியா பெரிய எண்ணிக்கையில் ஊழியர்களையும் படைகளையும் ரஷ்யாவுக்கு அனுப்பியதாக தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ள தேசிய உளவுச் சேவை கூறியுள்ளது.
ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டுமானத் தளங்களுக்கு ஆயிரக்கணக்கான ஊழியர்களை வடகொரியா அனுப்பியதாக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) உளவுச் சேவை தெரிவித்தது. கடந்த அக்டோபரில் கூறப்பட்ட கணிப்பைவிட இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஏறத்தாழ 4,000 வடகொரிய ஊழியர்கள் ரஷ்யாவில் இருந்ததாக நம்பப்படுவதாக உளவுச் சேவை அப்போது கூறியிருந்தது. ஒவ்வோர் ஊழியருக்கும் மாத ஊதியமாக ஏறக்குறைய US$800 (S$1,000) வழங்கப்பட்டது.
கட்டுமானத் துறையில் நிலவும் ஊழியர் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய, வடகொரிய ஊழியர்களை ரஷ்யா பணியமர்த்தக்கூடும் என கொரிய ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி வி சுங் லாக் கூறினார்.
இதற்கிடையே, உக்ரேன் உடனான எல்லை அருகே ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் வடகொரிய ராணுவ வீரர்கள் முன்களத்தில் இறக்கப்பட்டதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி பிப்ரவரி 7ஆம் தேதி கூறியதை உளவுச் சேவை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
கர்ஸ்கில் செயல்பாடுகளில் இருந்து வடகொரிய வீரர்கள் மீட்டுக்கொள்ளப்பட்டனர் எனத் தெரிவதாக ஜனவரியில் அது கூறியிருந்தது.
ஜனவரி நடுப்பகுதி நிலவரப்படி, ரஷ்யாவுக்காக போரில் களமிறங்கிய குறைந்தது 300 வடகொரிய வீரர்கள் கொல்லப்பட்டு விட்டதாகவும் ஏறத்தாழ 2,700 பேர் காயமுற்றதாகவும் நம்பப்படுகிறது.
2024 அக்டோபர் முதல், உக்ரேனை எதிர்த்துச் சண்டையிட ரஷ்யாவுக்கு ஏறத்தாழ 11,000 ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியதாக உளவுச் சேவை சொன்னது. வடகொரிய வீரர்களுக்கு மாதந்தோறும் ஏறக்குறைய US$2,000 வழங்கப்பட்டதாக அது கூறியது.

