இடிபாடுகளுக்குள் பிறந்த குழந்தையைத் தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் விருப்பம்

1 mins read
7a7a7472-8157-4111-a560-901cb883065a
கட்டட இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து 'அயா' மீட்கப்படும் காணொளியை இணையத்தில் ஏராளமானோர் கண்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி -

டமாஸ்கஸ்: சிரியாவில் இடிபாடுகளுக்கு நடுவில் பிறந்த பெண் குழந்தையைத் தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

துருக்கியிலும் சிரியாவிலும் கடந்த திங்கள்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன; 20,000க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.

இதனிடையே, சிரியாவின் ஜிண்டேரிஸ் பகுதியில் கட்டட இடிபாடுகளுக்கு இடையே ஒரு பெண் குழுந்தை பிறந்தது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட போது அதன் தொப்புள் கொடி அறுக்கப்படாமல் தாயுடன் இணைந்திருந்தது.

அயா என்று அழைக்கப்படும் அக்குழந்தையின் குடும்பத்தில் அனைவருமே நிலநடுக்கத்தில் மாண்டுபோயினர்.

குழந்தை மீட்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, பலரின் கவனத்தை ஈர்த்தது.

அயா தற்போது சிரியாவின் அஃப்ரின் நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் உள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அயாவைத் தந்தெடுக்க பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

ஆயினும், அயாவின் உறவினர்கள் அவளைத் தேடிவரும்வரை அவளைத் தத்துக் கொடுக்கப்போவதில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இப்போது, அம்மருத்துவமனையின் மேலாளர் டாக்டர் காலித் அட்டியாவின் மனைவியே அயாவிற்குத் தாய்ப்பாலூட்டி வருகிறார். அத்தம்பதியருக்கும் நான்கு மாதத்தில் ஒரு மகள் இருக்கிறாள்.