காலாங் டிஸ்‌ட்ரிபார்க்கில் கட்டப்பட இருக்கும் ஆயிரக்கணக்கான தனியார் வீடுகள்

காலாங் டிஸ்‌ட்ரிபார்க்கில் கட்டப்பட இருக்கும் ஆயிரக்கணக்கான தனியார் வீடுகள்

2 mins read
705b333c-e923-4403-9339-c861b8cc89de
குடியிருப்புப் பகுதியாக மாற்றம் காண இருக்கும் காலாங் டிஸ்ட்ரிபார்க். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

காலாங் ஆற்றோரத்தில் அமைந்திருக்கும் பயன்படுத்தப்படாத ரப்பர் தொழிற்சாலை வளாகமான காலாங் டிஸ்ட்ரிபார்க், புதிய தனியார் குடியிருப்புப் பகுதியாக மறுமேம்பாடு செய்யப்படவுள்ளது.

இதற்காகக் குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சில குடியிருப்பு மனைகளாகவும் புதிய குடியிருப்புப் பூங்காவாகவும் புதிய சாலைகளாகவும் பிரிக்கும் வகையில் பெருந்திட்டத்தில் திருத்தங்களைச் செய்ய நகர மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தனியார் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்துவதற்கு வசதியாக இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாக ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஏறத்தாழ 13 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த நிலம், பிரபல தொழிலதிபர் லீ கொங் சியான் உருவாக்கிய லீ ரப்பர் நிறுவனத்துக்குச் சொந்தமான அமைப்புகளின்கீழ் உள்ளது.

இதில் மூன்று குடியிருப்பு மனைகள் உருவாக்கப்படவுள்ளன. அவற்றில் இரண்டு குடியிருப்புகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

அந்த இரண்டில் பெரிதான மனை, காலாங் பாருவை ஒட்டிய ஏறத்தாழ 3.6 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதில், ஏறத்தாழ 1,200 கூட்டுரிமை வீடுகள் கட்டப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மனையான பெல்டன் கால்வாயை ஒட்டிய 1.6 ஹெக்டேர் நிலத்தில் 450 முதல் 550 கூட்டுரிமை வீடுகள் கட்டப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.4 ஹெக்டேர் பரப்பளவிலான மூன்றாவது மனையின் தரைத்தளத்தில் வர்த்தகப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்படும். இங்கு 600 முதல் 800 கூட்டுரிமை வீடுகள் கட்டப்படலாம் என வீடமைப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றைத் தவிர, இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் புதிய பூங்காவும் புதிய குடியிருப்புகளுக்கு இட்டுச் செல்லும் புதிய சாலைகளும் எதிர்காலப் பயன்பாட்டிற்கான 1.8 ஹெக்டேர் நிலமும் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த வட்டாரத்தில் எண்கோண வடிவத்தில் பழமையான கட்டடங்கள் உள்ளன. வரலாற்று மரபுச் சின்னத்தைக் காக்கும் வகையில், அவற்றில் ஒரு கிடங்கையாவது புதிய பூங்காவில் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து நிலத்தின் உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

குடியிருப்புகளைக் கட்ட கேலாங் பாரு தொழிற்பேட்டை அமைந்துள்ள நிலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேலாங் பாரு ரயில் நிலையத்துக்கு அருகிலும் ஆற்றோரத்திலும் கட்டப்பட இருக்கும் வீடுகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் இப்பகுதிக்குப் புதிய புத்துணர்ச்சி கிடைக்கும் என்றும் சொத்துச் சந்தை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
தனியார் வீடுநகர மறுசீரமைப்பு ஆணையம்குடியிருப்பு