ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்களை மியன்மார் படைகள் கொன்றன: அனைத்துலக நீதிமன்றம்

ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்களை மியன்மார் படைகள் கொன்றன: அனைத்துலக நீதிமன்றம்

படம்: ராய்ட்டர்ஸ்

19 Nov 2026 - 8:31 pm

2 mins read

த ஹேக்: முஸ்லிம் சிறுபான்மையினர் மீது 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒடுக்குமுறையின்போது மியன்மார் பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியர்களைக் கொன்றதாக அனைத்துலக நீதிமன்றம் வியாழக்கிழமை (நவம்பர் 19) தெரிவித்தது.

இத்தகைய நடவடிக்கைகள் இனப் படுகொலையாகக் கருதப்படுமா என்பது குறித்து நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது. மியன்மார் படையினர் ரோஹிங்கியர்களைக் கொன்று, பாலியல் வன்கொடுமை செய்ததுடன் சிறுவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு, ரோஹிங்கியா கிராமங்களையும் குடியிருப்புகளையும் அழித்ததாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பங்ளாதேஷுக்குப் பேரளவில் தப்பிச் செல்ல முயன்ற ரோஹிங்கியர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியதாக அனைத்துலக நீதிமன்றத் தலைவர் யூஜி இவாசாவா தெரிவித்தார்.

பங்ளாதேஷ் எல்லையில் உள்ள உலகின் மிகப் பெரிய அகதிகள் முகாமில் தற்போது வசித்துவரும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்கியர்களுக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை வழங்கியுள்ளது.

“எனக்கு நீதி வேண்டும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்குக் கடுந்தண்டனை வழங்கப்பட வேண்டும். இது குறித்து அனைத்துலக நீதிமன்றம் தனியாக ஏதேனும் கூற வேண்டும்,” என்று தமது குடும்பத்தினருடன் நெருக்கடியான கூடாரத்தில் வசித்துவரும் 23 வயது ரோஹிங்கியா பெண் தெரிவித்தார்.

இவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர். தமது பெயரை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் இக்கருத்தைத் தெரிவித்தார்.

வன்முறையிலிருந்து உயிர் தப்பிய ரோஹிங்கியர்கள், பாலியல் வன்கொடுமை, கண்மூடித்தனமான படுகொலைகள், குடும்பங்கள் மற்றும் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்கள் குறித்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அகதிகள் முகாம்களின் அவல நிலையிலிருந்து வெகு தொலைவில், 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு மியன்மாரின் நடவடிக்கைகள் இனப் படுகொலையாக அமையுமா என்பது குறித்து ஏழு ஆண்டுகளாக ஆராய்ந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்