கோடைக்குள் எண்ணெய்ச் சந்தைக்கு ஆபத்து வரக்கூடும்: எரிசக்தி அமைப்பு எச்சரிக்கை

கோடைக்குள் எண்ணெய்ச் சந்தைக்கு ஆபத்து வரக்கூடும்: எரிசக்தி அமைப்பு எச்சரிக்கை

1 mins read
abd86e57-e3ef-4960-b998-f3a8be607c9f
எரிசக்தித் துறையில் ஏற்பட்ட அதிர்ச்சிகளைச் சமாளிக்கப் போருக்கு முன்பு, சந்தையில் உபரியாக இருந்த எண்ணெய் கைகொடுத்ததாக அனைத்துலக எரிசக்தி அமைப்பு கூறியது. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: கோடைக்காலத்திற்குள் உலக எண்ணெய்ச் சந்தை ஆபத்தான நிலையை எட்டக்கூடும் என்று அனைத்துலக எரிசக்தி அமைப்பின் தலைவர் ஃபாத்தி பிரோல் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாவிட்டால் அத்தகைய நிலையைச் சந்திக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

“போர் நிலவரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாவிட்டால் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அத்தகைய ஆபத்தான நிலை வரக்கூடும்,” என்று திரு பிரோல் சொன்னார். லண்டனில் வியாழக்கிழமை (மே 21) நடைபெற்ற நிபுணத்துவ ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் அந்தக் கருத்தை முன்வைத்தார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி போர் தொடுத்தன. அதன் பிறகு, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. எண்ணெய், எரிவாயுப் போக்குவரத்து நிலைகுத்திப்போனது. அவற்றின் விலைகள் வெகுவாகக் கூடியுள்ளன.

எரிசக்தித் துறையில் ஏற்பட்ட அதிர்ச்சிகளைச் சமாளிக்கச் சந்தையில் போருக்கு முன்பு உபரியாக இருந்த எண்ணெய் கைகொடுத்தது என்று திரு பிரோல் குறிப்பிட்டார். இருப்பினும் கையிருப்புக் குறைந்துவருவதாக அவர் சொன்னார்.

எண்ணெய்ச் சுத்திகரிப்புக்கு அதிக நேரம் எடுக்கும் என்றும் போருக்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பக் கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

கடந்த மாதம் (ஏப்ரல்) 8ஆம் தேதி மத்திய கிழக்குப் போரில் சண்டைநிறுத்தம் நடப்புக்கு வந்தது. ஆனால் நீடித்த அமைதி உடன்பாட்டை எட்டுவதற்கான சமரசப் பேச்சுகள் இதுவரை பலனளிக்கவில்லை. அது உலகப் பொருளியலைப் பாதித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்